
ரோஜா படத்தின் போது, “நான் நினைத்திருந்தால் இசைக்கலைஞர்கள் யாரையும் பயன்படுத்தாமல் சாம்பிள்களை மாத்திரம் பயன்படுத்தியே அந்த இசையை ஹிட் ஆக்கி இருக்க முடியும். ஆனால் முதல் படத்திலேயே எனக்கு அந்த புரிதல் ஏற்பட்டுவிட்டது. அதனால்தான் ரோஜா திரைப்படத்தின் அனைத்து பாடல்களுக்கும் இசை வாத்திய கலைஞர்களைப் பயன்படுத்தினேன். வாத்திய கலைஞர்கள் யாரும் இல்லாமல் இசையமைக்கலாம் என்ற வழக்கு ஒன்றை நான் உருவாக்கக் கூடாது என்று நினைத்தேன். உண்மையான வாத்தியக்கலைஞர்களை பயன்படுத்தினால்தான் உயிரோட்டமும் கிடைக்கும். AI கூட அப்படித்தான். அதனை ஒரு கருவியாகவே நான் பார்க்கிறேன். அது இந்தத் துறையில் இருக்கின்ற மற்றவர்களின் தொழிலைப் பாதிக்கக்கூடாது. சம்பாதிப்பதை எவ்வளவுதான் தனியாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்? வருமானத்தைப் பகிர்ந்து கொண்டு வாழ்வதிலேயே சுகம் இருக்கிறது”இவ்வாறு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் கோபிநாத் உடனான செவ்வியில் குறிப்பிட்டிருக்கிறார். இதே கருத்தைப் பல ஆண்டுகளுக்கு முன்னர் பிரபலியமான மென்பொருள் சிந்திசைசரான Omnisphere ஐ உருவாக்கும் spectrotonic நிறுவனத்தின் இணையத்தளத்திற்கு வழங்கிய செவ்வியிலும் குறிப்பிட்டிருந்தார். அதாவது நிஜமான வாத்திய கலைஞர்களை வைத்து ஒலிப்பதிவு செய்த இசை ஒலியுடன், சிந்திசைசரில் உருவாக்கிய ஒலியையும் இணைத்துப் பயன்படுத்தும் போது புதுவிதமான ஒலி நயம் கிடைக்கும், என்றிருப்பார்.