
கோலாலம்பூர், 4 பிப்ரவரி — இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா பத்து மலைக்கு வருகை தரும் 1.2 முதல் 1.5 மில்லியன் பக்தர்களுக்காக மேம்பட்ட மருத்துவ மற்றும் அவசர சேவைகளை வழங்க உள்ளது. பிப்ரவரி 11 அன்று நடைபெறவுள்ள மகா திருவிழாவின் பாதுகாப்பு மற்றும் அவசர மீட்பு ஏற்பாடுகளை சிறப்பாக நடத்த, ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஶ்ரீ ஆர். நடராஜா தலைமையில் மத்திய கட்டுப்பாட்டு, தகவல் தொடர்பு, ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
SMMTD மருத்துவ மற்றும் அவசர சேவைகள் ஒருங்கிணைப்பாளர் டத்தோ டாக்டர் ஏ.டி. குமாரராஜா கூறுகையில், மலேசியா சுகாதார அமைச்சின் (KKM) கீழ் உள்ள எட்டு முக்கிய மருத்துவமனைகள், ஒன்பது அரசாங்க மற்றும் தனியார் அமைப்புகள், சமூக சேவை அமைப்புகள், தீயணைப்பு படை, தேசிய இரத்த நிலையம் உள்ளிட்டவை இதில் பங்கேற்கின்றன. மருத்துவ சேவைகள், பத்து மலை கோயிலின் 14 ஏக்கர் பரப்பளவுக்கு மட்டுமல்லாமல், காவடிகள் தொடங்கும் நதிக்கரைக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
அவசர சேவைகள் வேகமாக செயல்பட, திடீர் மருத்துவ தேவைகளைச் சமாளிக்க பத்து மலை வளாகம் 24 மருத்துவ மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. 272 படிகள், காவடி வழிபாட்டு பாதை, இரயில் நிலையம், கோயிலின் முன்பகுதி போன்ற முக்கிய இடங்களில் மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் இருப்பர்.
தேவஸ்தானத்தின் அறங்காவலர் டத்தோ ந.சிவக்குமார், பிப்ரவரி 9ஆம் தேதி இரவு 9 மணிக்கு ஜாலான் டுன் எச்.எஸ். லீ ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் இருந்து, 15 கிமீ தூரம் கடந்து பத்து மலைக்கு சென்று முருகன் சிலை எழுந்தருளும் வெள்ளி ரத ஊர்வல ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெறுவதாக தெரிவித்தார். 100,000 பக்தர்கள் இதில் பங்கேற்கும் நிலையில், காவல் துறை, மாநகராட்சி அதிகாரிகள், 1,500 தன்னார்வலர்கள் வழிகாட்டிகள் ஆக செயல்படுவார்கள்.
-வீரா இளங்கோவன்