
பினாங்கு, 28 ஜனவரி — பெற்றோரின் இல்லாமை வாழ்வில் சவாலாக இருந்தாலும், அது ஒரு போதும் சமூக சேவையில் ஈடுபடுவதற்கு தடையாக அமையாது என பினாங்கு பொக்கோக் மச்சாங் பகுதியை சேர்ந்த தேசிகன் பிள்ளை உறுதியாக தெரிவித்துள்ளார்.
அண்மையில் பினாங்கு பழனியாண்டி தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 10 மாணவர்களுக்கு பள்ளிக்கு தேவையான பொருட்களை வாங்க நிதி உதவி செய்தார். இதில் பாகான் நிபுணத்துவ மருத்துவமனை மருத்துவர் டாக்டர் வாசு பெரும் ஆதரவை வழங்கியதாக தேசிகன் பிள்ளை தெரிவித்தார். மேலும், கடந்த 10 ஆண்டுகளாக டாக்டர் வாசு சுற்று வட்டார மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருவதாகவும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பழனியாண்டி தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் கார்த்திக் மாரி, தேசிகன் பிள்ளை மற்றும் டாக்டர் வாசுவுக்கு தமது நன்றியினைத் தெரிவித்தார்.
இந்த மாதிரி உதவிகள், குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவுவதுடன், சமூகத்துக்கான உதாரணமாகவும் விளங்குகின்றன. தனிப்பட்ட சவால்களை தாண்டி பிறருக்கு உதவும் இந்த முயற்சிகள் பலருக்கும் ஊக்கமளிக்கும் என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இம்மாதிரியான உதவி செய்யும் முயற்சிகள் தொடர வேண்டும். இது மக்களிடையே நல்லிணக்கத்தை மேம்படுத்தும் என சமூக நல ஆர்வலர்களும் கருத்து தெரிவித்தனர்.
-வீரா இளங்கோவன்