
கோத்தா கினபாலு, செப் 19 – சபாவில் ஏற்பட்ட மண் சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து, அவர்களின் தேவைகளை உறுதிப்படுத்த இன்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேரில் வருகை தருகிறார்.
மதியம் 2.15 மணிக்கு, பெனாம்பாங்க் Country Heights பகுதியில் ஏற்பட்ட மண் சரிவு இடத்தை முதலில் பார்வையிட உள்ளார். அதனைத் தொடர்ந்து, மதியம் 3.00 மணிக்கு, எஸ்.கே. செயின்ட் பால், கொலோபிஸ் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மாற்று மையத்தில் (PPS) பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க உள்ளார். இங்கு அவர் மக்களின் நிலையை அறிந்து, அவர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதிசெய்வார்.
பின்னர், 3.40 மணிக்கு, பி.பி.எஸ். கம்போங் சரபுங்க், பெனாம்பாங்கில் மக்களைச் சந்தித்து, அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை கேட்டு, உற்சாகம் அளிப்பார். மாலை 4.30 மணிக்கு, IPG கம்பஸ் காயா, கோத்தா கினபாலுவில் நிகழ்ந்த மண் சரிவு இடத்தையும் பார்வையிட உள்ளார்.
சபா மாநில பேரிடர் மேலாண்மை குழுவின் தகவல்படி, நேற்று மாலை நிலவரப்படி 3,325 பேர் (964 குடும்பங்கள்) 27 தற்காலிக மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், பியூபோர்டில் ஒரு நிரந்தர மாற்று மையமும் இயங்குகிறது.
இதுவரை, மண் சரிவில் 13 பேர் உயிரிழந்ததுடன், வெள்ளத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை, பிரதமர் அன்வார் தேசிய பேரிடர் மேலாண்மை முகவரியின் மூலம் RM10 மில்லியன் அவசர நிதியை ஒதுக்கீடு செய்தார். இது தவிர, அடிப்படை வசதிகளை சீரமைக்க RM11 மில்லியன் ஏற்கனவே மாநில அரசின் மூலம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
-ஸ்ரீ



