
கோலாலம்பூர், 22 ஜனவரி– நிதியமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையின் படி, முதல் கட்ட ரஹ்மா உதவித் தொகை (STR) இன்று புதன்கிழமை முதல் வழங்கப்பட தொடங்குகிறது.
இந்த திட்டத்திற்காக அரசாங்கம் 2.3 பில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ளது, இது கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட 2.1 பில்லியன் ரிங்கிட் தொகையை விட அதிகமாகும். இந்த திட்டத்தின் மூலம் மொத்தம் 83 லட்சம் பேர் நிவாரணம் பெறுவர்.
அரசாங்கம், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளை சமாளிக்க இந்த நிதியை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஒரு குடும்பத்திற்கு 3,700 ரிங்கிட் வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டுக்கான தொகை 25% உயர்ந்து 4,600 ரிங்கிட் ஆக உயர்ந்துள்ளது.
திருமணம் ஆகாதவர்களுக்கு வழங்கப்படும் தொகையும் 500 ரிங்கிட் இருந்து 600 ரிங்கிட் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
தகுதியுடைய நபர்களின் வங்கிக் கணக்குகளில் இந்த தொகை நேரடியாகச் செலுத்தப்படும். மேலும், புதிய விண்ணப்பங்களை ரஹ்மா உதவித் தொகைக்கான அதிகாரப்பூர்வ தளத்தின் மூலம் ஆண்டு முழுவதும் சமர்ப்பிக்கலாம் என நிதியமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
-வீரா இளங்கோவன்