
கோலாலம்பூர், 6 ஏப்ரல்: தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் ம.இ.கா தேசியத் துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ டாக்டர் எம். சரவணன் ஒரு வித்தியாசமான மற்றும் மனதை மகிழ்விக்கும் நிகழ்வில் கலந்து கொண்டதை தன்னுடைய சமூக ஊடகப் பதிவில் பகிர்ந்துள்ளார்.
அவர் தெரிவித்ததாவது, “இன்று மிகவும் தனித்துவமான நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. உணவுக்கும் இசைக்கும் சமமாக விருந்தளித்த இந்த நிகழ்வு, உண்மையில் மனதை மகிழவைக்கும் வகையில் இருந்தது. வாழைஇலையில் பரிமாறப்பட்ட அறுசுவை உணவு வயிற்றுக்கு விருந்தாக இருந்தது; அதனைத் தொடர்ந்து இசை நிகழ்ச்சி செவிக்கு விருந்தாக அமைந்தது.”
இந்த நிகழ்வு வெறும் கலைவிழாவாக மட்டுமல்லாமல், சமூக சேவைகளுக்கான நிதி திரட்டும் உயரிய நோக்கத்துடன் நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்நிகழ்வின் சிறப்பு என்னவெனில், சமூகத்துக்காக நிதி திரட்டும் நோக்கத்தில் இருந்த போதிலும், வந்திருந்த அனைவருக்கும் மகிழ்ச்சி வழங்கும் அளவிற்கு நயமிக்க முறையில் அதை ஒருங்கிணைத்திருந்தனர்.

“இந்நிகழ்வு போன்ற சமூக நலனுக்கான முயற்சிகளை அனைவரும் ஆதரிக்க வேண்டும். நம் பாரம்பரியத்தை கொண்டாடும் வகையில், இனிய உணவும் இசையும் கலந்த இந்த விழா உண்மையிலேயே நினைவில் நிற்கும் நிகழ்வாக இருந்தது,” என டத்தோ ஸ்ரீ சரவணன் கூறினார்.
இந்நிகழ்வின் மூலம் நிதி திரட்டுவதுடன், கலாச்சாரத்தைப் பாதுகாத்து மக்களின் உள்ளத்தையும் வெல்லும் முயற்சி சிறப்பாகச் செயல்பட்டதாக பலரும் பாராட்டுகின்றனர்.
-யாழினி வீரா