
சிம்பாங் எம்பாட், 3 பிப்ரவரி — சிம்பாங் எம்பாட் பகுதியில் பிளாஸ்டிக் பையில் புதிதாக பிறந்த பெண்பிள்ளை ஒருவரது வீட்டின் முன்பு விட்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
காங்கார் காவல் துறை தலைவர் ஏசிபி யுஷரிபுதின் முகமது யூசோப் கூறுகையில், 29 வயதான உணவகம் உதவியாளராக பணியாற்றும் பெண் மீது பொதுமக்கள் கொடுத்த தகவல்கள் அடிப்படையில் இன்று அதிகாலை 2.55 மணிக்கு சிம்பாங் எம்பாட் பகுதியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்.
முதற்கட்ட விசாரணையில், சந்தேக நபர் தனது நான்கு குழந்தைகளுடன் வசிக்கிறார் என்றும் மேலும் அவருடைய கணவர் தற்போது போதை பொருள் மறுவாழ்வு மையத்தில் இருக்கிறார் என்றும் தெரியவந்துள்ளது. ஜனவரி 18ஆம் தேதி மாலை 6.30 மணியளவில், சிம்பாங் எம்பாட், ஜாலான் டோக் புலாவிலுள்ள வீட்டின் கழிவறையில் பெண் குழந்தையை பெற்றெடுத்ததாக கூறப்படுகிறது.
ஜனவரி 19ஆம் தேதி அதிகாலை 4.30 மணியளவில், தனது நண்பரின் Myvi ரக கார் மூலம் குழந்தையை கம்பங் ராமாவில் உள்ள உணவகத்திற்கு கொண்டு வந்து விட்டு சென்றதாக நம்பப்படுகிறது.
சமந்தபட்ட பெண் விசாரணைக்காக நான்கு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார், மேலும் இந்த வழக்கு 317வது பிரிவின் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், 7 ஆண்டு சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் வழங்கப்படலாம்.
ஜனவரி 19ஆம் தேதி, பிளாஸ்டிக் பையில் சுருட்டப்பட்ட நிலையிலும், ஆடையில் மடித்தபடியும் குழந்தை மீட்கப்பட்டது. இப்போது, குழந்தை உடல்நிலை சீராக இருக்கிறது என ஏசிபி யுஷரிபுதின் தெரிவித்திருந்தார்.
-வீரா இளங்கோவன்