
கோலாலம்பூர், 29 ஜனவரி — 76வது இந்திய கூட்டரசு தின விழா நேற்று முன்தினம் கோலம்பூரில் மிகுந்த சிறப்புடன் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை இலக்கவியல் அமைச்சர் கோபிந் சிங் டியோ அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார். நிகழ்வில் ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, இந்தியாவுக்கான தூதர் பி.என் ரெட்டி உள்ளிட்ட பல்வேறு நாட்டுத் தூதர்கள், கல்வியாளர்கள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் முக்கிய இந்திய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
விழாவில் பாரம்பரிய இந்திய ஆடல், இசை, நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. மேலும், மலேசிய பண்பாட்டை பிரதிபலிக்கும் மலாய் கலை நிகழ்வுகளும் சேர்க்கப்பட்டன. இதன் மூலம், இரு நாடுகளின் கலாச்சார ஒற்றுமை சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டது.
விழாவின் சிறப்பு அம்சமாக, கண்பார்வையற்றோர் நிகழ்ச்சியை அறிவிப்புச் செய்ததோடு, பல்வேறு மொழிகளில் பாடல் வழங்கியதன் மூலம் அனைவரையும் ஈர்த்தனர்.
இந்தியாவுக்கும் மலேசியாவுக்குமான உறவு நீண்ட காலத்திலிருந்து தொடர்ந்தும் வலுப்பெற்று வருகிறது. இலக்கவியல் துறையில் கோபிந் சிங் டியோ மேற்கொள்ளும் முன்னேற்றங்களை பாராட்டிய இந்திய தூதர் பி.என் ரெட்டி, இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார மற்றும் சுற்றுலாதுறை ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
-வீரா இளங்கோவன்