
நீலாய், 20 பிப்ரவரி — நெகிரி செம்பிலான் மாநிலத்தின் நீலாய் பகுதியில் அமைந்திருந்த ஒரு சட்டவிரோத போதைப்பொருள் தயாரிப்பு ஆலையில் போலீசாரின் அதிரடி சோதனையில் மொத்தம் RM3.2 மில்லியன் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டது.
நெகிரி செம்பிலான் போலீஸ் தலைவர் டத்தோ அகமட் ஜாஃபிர் முகமது யூசோப் வெளியிட்ட அறிக்கையில், மாநில போதைப்பொருள் குற்றத்தடுப்பு பிரிவு, மாநில போலீஸ் தலைமையகம் மற்றும் நீலாய் மாவட்ட போதைப்பொருள் குற்றத்தடுப்பு பிரிவுடன் சேர்ந்து இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
போலீசார் அந்த இடத்தில் இருந்து, போதைப்பொருள் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பல்வேறு உபகரணங்கள் மற்றும் திரவ பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இதில் 27 முதல் 38 வயதுக்குள் உள்ள இரண்டு உள்ளூர் நபர்கள் மற்றும் மூன்று வெளிநாட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
“இந்த சோதனையில், 2,145 கிராம் எடையுடைய, RM429,000 மதிப்புள்ள கோக்கைன் போதைப்பொருள், பல்வேறு வகையான பொடிகள், திரவ வேதிப்பொருட்கள் மற்றும் மின்சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன,” என்று அவர் கூறினார்.
மேலும், போலீசார் நான்கு வாகனங்கள், RM66,830 ரொக்கம், RM29,822.70 மதிப்பிலான வெளிநாட்டு நாணயங்கள், RM477,773.73 மதிப்பிலான ஆபரணங்கள் மற்றும் கைக்கடிகாரங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த நடவடிக்கை, 1988 ஆம் ஆண்டு அபாயகரமான போதைப்பொருள் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட அனைவரின் ஆரம்ப சிறுநீர் பரிசோதனையில், ஒர் உள்ளூர் நபரும், ஒரு வெளிநாட்டவரும் மெத்தாம்பேட்டமைன் மற்றும் பென்சோ உட்கொண்டிருப்பது கண்டறியப்பட்டது. மேலும், இவர்களுக்கு முந்தைய குற்றப் பதிவுகளும் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
மேல்விசாரணைக்காக அனைத்து சந்தேகநபர்களும் பிப்ரவரி 18 முதல் பிப்ரவரி 24 வரை ஏழு நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு 1952 ஆம் ஆண்டு அபாயகரமான போதைப்பொருள் சட்டத்தின் 39B பிரிவு மற்றும் 15(1)(α) பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.