
கோலாலம்பூர், 12 பிப்ரவரி — கோலாலம்பூரில் தைப்பூசத்தையொட்டி, வெள்ளி தேர்ப்பவனி ஜாலான் டுன் HS லீயிலிருந்து பத்து மலை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு சென்று, முக்கிய ஆன்மிக நிகழ்வாக இடம்பெறுகிறது. இந்த நிகழ்ச்சியில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் 14.2 கி.மீ தூரத்தைக் கால்பாதியாக நடைபயணம் செய்து, தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர்.
எனினும், இத்தகைய பெரிய திரளான கூட்டத்தை கருத்தில் கொண்டு, நகராட்சி மன்றமான DBKL மிகக்குறைவான மொபைல் கழிவறைகளை மட்டுமே நிறுவியுள்ளது. பால் குடம் ஏந்திய பக்தர்கள், குறிப்பாக மூத்த குடிமக்கள் மற்றும் பெண்கள், போதிய கழிவறை வசதிகள் இல்லாமல் பெரும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர். இரவு நேரம், அலுவலகங்கள் மற்றும் கடைகள் மூடப்பட்டுள்ளதால், மாற்று வசதிகளும் இல்லாமல் பக்தர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
முந்தைய ஆண்டுகளில், PPP இளைஞர் அணியின் முயற்சியில் 300க்கும் மேற்பட்ட மொபைல் கழிவறைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. ஆனால், ஸ்பான்சர்ஷிப் பற்றாக்குறையால், இந்த முயற்சி தொடர முடியவில்லை. இதனை நினைவில் கொண்டு, கோலாலம்பூர் நகர மேயரும் தனியார் நிறுவனங்களும் இணைந்து, ஒவ்வொரு 1.5 கி.மீ இடைவெளியிலும் ஒரு மொபைல் கழிவறையை ஏற்படுத்த வேண்டும் என பிபிபி கட்சியின் விலாயா மாநில தலைவர் சத்யா சுதாகரன் வலியுறுத்தியுள்ளார்.
நாளை மாலை தேர்பவனி மீண்டும் ஜாலான் துன் HS லீயில் உள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் கோயிலுக்குத் திரும்பும் போது, இந்த வசதியின்மையின் தாக்கம் மீண்டும் அதிகரிக்கும். எனவே, பக்தர்களின் சிரமங்களை குறைக்கும் வகையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
-வீரா இளங்கோவன்