
கூலா லம்பூர், மே 26: பொதுமக்களுக்கு துல்லியமான மற்றும் நம்பகமான தகவல்களை வழங்கி நாட்டின் பாதுகாப்பு மற்றும் சமாதானத்தை உறுதி செய்யும் ஊடகத்துறையின் பங்களிப்பை பாராட்டியுள்ள மலேசிய காவல் துறை (PDRM), ஊடகவியலாளர்களுடன் பலமான ஒத்துழைப்பை தொடரவுள்ளதாக தெரிவித்தது.
புகிட் ஆமனில் இன்று நடைபெற்ற ஊடக நன்றியறிதல் விழாவில் பேசிய காவல்துறைத் தலைவர் தான்ஸ்ரீ ரசாருடின் ஹுசைன், “நாட்டின் அரசியலமைப்பின் மதிப்பையும், சட்டத்தின் செயல்பாட்டையும் பொதுமக்களுக்கு நேர்மையாக எடுத்துச் செல்ல ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன” எனக் கூறினார்.
“நீதி மற்றும் பாரபட்சமற்ற தகவல்களை பகிர்வது ஊடகங்களும் போலீசும் பகிர்ந்தெடுத்துள்ள பொறுப்பாகும். ஊடகங்களின் ‘தனித்துவமான சக்தி’ மக்களின் மனங்களை மாற்றி, தேசிய ஒற்றுமையை வலுப்படுத்த உதவுகிறது,” என அவர் கூறினார்.
பி.டி.ஆர்.எம் ஊடகங்களை தகவல் வழங்குவோராக மட்டுமல்லாமல், மக்களின் குரலாகவும், கட்டமைப்புகளை மேம்படுத்த கூர்மையான ஆலோசனைகளை வழங்கும் பார்வையாளர்களாகவும் மதிக்கிறது.
மலேசியா மதானி கொள்கையின் அடிப்படையில், மதிப்பு, பரிவு மற்றும் சமத்துவத்தை நோக்கி தொடரும் பயணத்தில், ஊடகத்துறை பி.டி.ஆர்.எம்-இன் நிலையான கூட்டாளியாகும் என அவர் உறுதிப்படுத்தினார்.
-யாழினி வீரா



