
கோலாலம்பூர், 11 மார்ச் — சர்ச்சைக்குரிய போதகர் ஜம்ரி வினோத்துடனான மத விவாதம் நடத்தப்படாது என்று மஇகா தேசிய துணைத் தலைவர் மற்றும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம். சரவணன் அறிவித்துள்ளார்.
ஜம்ரி, காவடி ஏந்தும் இந்துக்கள் குறித்து அவமதிக்கும் வகையில் பேசியிருந்ததாக கூறப்படுகிறது. அவர், “காவடி ஏந்தும் இந்துக்கள் பேய் பிடித்தவர்கள் போல நடந்து கொள்கிறார்கள், மேலும், மது அருந்திய நிலையில் ‘வேல் வேல்’ என்று கூச்சலிடுவார்கள்,” என தனது பேச்சுகளில் கூறியதனால் பெரும் எதிர்ப்பு எழுந்தது. இதற்குப் பதிலளிக்க சரவணன் அவருக்கு நேரடியாக விவாதம் செய்ய சவால் விடுத்திருந்தார். இந்த விவாதம் மார்ச் 23 அன்று நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சர் மற்றும் காவல்துறையிடமிருந்து கிடைத்த ஆலோசனைகளை கருத்தில் கொண்டு, மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனுடன் கலந்தாலோசித்த பிறகு, இந்த விவாதத்தைத் தொடராதே என முடிவெடுக்கப்பட்டதாக சரவணன் தெரிவித்தார்.
“விவாதம் நடைபெறாது என்றாலும், இந்து மதத்தை அவமதிக்கும் நபர்களுக்கு எதிரான எனது போராட்டம் தொடரும். இந்த விவகாரத்தில் எந்த விதமான சமரசமும் செய்ய மாட்டேன். ஜம்ரிக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும், எந்த மதத்தையும் இழிவுபடுத்துதல் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் அவசியம் எனவும் அவர் கூறினார்.
“மலேசியா பல இன, பல மதக் கலாச்சாரம் கொண்ட நாடாகும். மத நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் பாதுகாக்க நாம் அனைவரும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்,” என்று பிரிக்பீல்ட்ஸ் கார சாரம் உணவகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.
-யாழினி வீரா