
நிபோங் திபால்: மரா அறிவியல் பள்ளி (MRSM) ஒன்றில் மாணவர் பகடிவதைக்கு ஆளான சம்பவம் தொடர்பான விசாரணையில், 15 வயதான ஐந்து மாணவர்களிடம் போலீசார் இன்று வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் சமீபத்தில் சமூக ஊடகங்களில் பரவியதால் பெரும் கவனம் பெற்றது.
செபராங் பிறை தெற்கு மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் டிஎஸ்பி மொக்த் நோரஸ்மி அப்த் கபார் கூறுகையில், சம்பவத்தில் மொத்தமாக ஏழு மாணவர்கள் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட மாணவரும், அந்த வீடியோவை பதிவு செய்தவரும் உள்ளடங்குகின்றனர். இதுவரை ஐந்து பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு, மற்ற இருவரிடம் விரைவில் பதிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
சம்பவம் கடந்த ஆண்டு நடுப்பகுதியில் செபராங் பிறை தெற்கு பகுதியிலுள்ள MRSM-இல் உள்ள ஒரு விடுதியில் நடந்ததாக போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 323 கீழ், குற்றமாகக் கருதப்படும் வன்முறையை ஏற்படுத்தியதற்காக விசாரிக்கப்படுகிறது.
மஜ்லிஸ் அமானா ராக்யாட் (MARA) தலைவர் டத்தோ டாக்டர் அஷ்ராஃப் வஜ்டி டுசுகி தெரிவித்ததாவது, சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அவர்கள் MRSM-இல் இருந்து நீக்கப்படுமெனத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
விசாரணை விரைவில் முடிக்கப்படவுள்ளதாகவும், அதன் பின் மேலதிக நடவடிக்கைக்காக சட்டபாதுகாப்பாளர் அலுவலகத்திற்கு வழக்குப் போடப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
-யாழினி வீரா