
படம் : இணையம்
அமெரிக்கா, 4 ஏப்ரல்- இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 27% வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் புதன்கிழமையன்று அதிரடியாக அறிவித்தார். முதலில் 26 சதவீத வரி விதிப்பு என அறிவிக்கப்பட்டு 27 சதவீத வரி விதிப்பு என்பதை வெள்ளை மாளிகை பின்னர் தெளிவுபடுத்தியது. 10 சதவீத அடிப்படை வரி விதிப்பு ஏப்ரல் 5-ம் தேதியிலிருந்தும், தனிப்பட்ட பரஸ்பர அதிக வரிவிதிப்பான 16 சதவீதம் ஏப்ரல் 9-ம் தேதிக்குப் பிறகும் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பல்வேறு நாடுகளின் பொருட்களுக்கு பரஸ்பர வரி விதிப்பை ட்ரம்ப் அமல்படுத்தியிருந்தாலும், அதில் குறிப்பிட்ட சில பொருட்களுக்கு இந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தங்கம், வெள்ளி, மருந்து, செமிகண்டெக்டர், எரிசக்தி, அரிய வகை கனிமங்கள், ஐடி சேவை உள்ளிட்டவற்றுக்கு பரஸ்பர வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரம்பின் பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கைக்குக் கனடா பிரதமர் மார்க் கார்னி, ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டணி அல்பனீஸ், அயர்லாந்து பிரதமர் மைக்கேல் மார்ட்டின், இத்தாலி பிரதமர் மெலோனி, இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
-ஶ்ரீஷா கங்காதரன்