
கோலாலம்பூர், 17 பிப்ரவரி — 2025/2026ஆம் ஆண்டுக்கான பள்ளித் தவணை இன்று தொடங்கியதை முன்னிட்டு, மலேசியாவின் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கம்போங் பாரு தேசிய பள்ளிக்கு விசேஷமாக வருகை புரிந்தார்.
பள்ளியின் முதல் நாளில், மாணவர்களை நேரில் சந்தித்து, அவர்களுடன் உரையாடி உற்சாகத்தை ஏற்படுத்திய பிரதமர், வகுப்பறைகளுக்குள் சென்று மாணவர்களின் கல்வி நிலையை பார்வையிட்டார். ஆசிரியர்களுடனும் கலந்துரையாடி, பள்ளியில் நடைபெறும் பாடத்திட்டங்கள் மற்றும் கல்வி நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்ந்தார்.
“நான் ஒரு காலத்தில் ஆசிரியராக வகுப்பறையில் இருந்தேன். இன்று, நாட்டின் மிகப்பெரிய பொறுப்பில் இருந்தபோதும், மீண்டும் ஒரு பள்ளிக்கு வருவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்,” என்று அன்வார் இப்ராஹிம் தனது சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார்.
பள்ளி என்பது ஒரு சிறந்த சமூகத்தை உருவாக்கும் முதன்மையான இடமாக திகழ்கின்றது என்று தெரிவித்த அவர், “கல்வியே வாழ்வின் வெற்றிக்கு அடிப்படை. சிறந்த சமூகத்தையும், தரமான மாணவர்களையும் உருவாக்க பெற்றோர்களும், ஆசிரியர்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்” என்று மாணவர்களையும், கல்வித்துறையினரையும் ஊக்கமளித்தார்.
பிரதமரின் இந்த திடீர் வருகை, பள்ளி மாணவர்களுக்கு மட்டுமின்றி, அங்கே பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் ஒரு இனிய அனுபவமாக அமைந்தது. கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் அரசாங்கத்தின் தொடர்ந்து மேற்கொள்ளும் முயற்சிகளில் இது முக்கியமான ஒன்று என கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
-யாழினி வீரா