
கோலாலம்பூர், 31 ஜனவரி — 2025 பிப்ரவரி 1 முதல் ஆக்ரோ மதானி (@agro_malaysia) பேக்கரி மற்றும் கன்ஃபெக்ஷனரி பிரிவின் தலைமை பயிற்சியாளராக விக்னேஸ்வரி பொறுப்பேற்கிறார் எனவும் அவர் நேரடியாக நிறுவனத்தின் தலைவருக்கு அறிக்கை வழங்குவார் என தனது முகநூல் வழி ஆக்ரோ மலேசியா தலைவர் டத்தோஸ்ரீ டி.எஸ்.ஜி தெரிவித்துள்ளார்.
பான்சி கஸ்டம் கேக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் விக்னேஸ்வரி, 2018 முதல் இந்தப் பதவியை வகித்திருந்த புவான் ஹாஜா கல்சோம் அவர்களிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்கிறார். அவரின் முக்கிய பணி, பேக்கிங் மற்றும் கன்ஃபெக்ஷனரி பயிற்சிகளைத் தொடர்ந்து மேம்படுத்தி, கலைமுறையான பேக்கிங் மற்றும் நவீன கேக் தயாரிப்பு பயிற்சிகளை வழங்குதல் ஆகும்.
இப்புதிய தலைமை பயிற்சியாளராக விக்னேஸ்வரியின் பதவியேற்பு விழாவும், புவான் ஹாஜா கல்சோம் அவர்களுக்கு விடை அளிக்கும் நிகழ்வும் மலேசிய வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சகத்தில் நடைபெற்றது.
மலேசியா பேக்கிங் இன்ஸ்டிட்யூட் (MIB College) 1977-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு மலேசிய உயர்கல்வி அமைச்சக அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனமாகும். இதன் உறுப்பினர்கள், தொழில்நுட்ப பயிற்சி பெற்று, தொழில் உலகில் கைதேர்ந்த பேக்கிங் நிபுணர்களாக உருவாக்கப்படுகிறார்கள்.
விக்னேஸ்வரி தலைமையில் நடைமுறைக்கு வரவிருக்கும் பேக்கரி பயிற்சிகள், ஆர்வமுள்ள நபர்களை முயற்சி வாய்ந்த பேக்கர்களாகவும், சிறந்த பேஸ்ட்ரி செப்களாகவும் மாற்றுவதற்கான வழிகாட்டியாக அமையும். 12 மாத அடிப்படை பயிற்சி + 3 மாத தொழில்துறை பயிற்சி மூலம், ரொட்டிகள், கேக்குகள், டெசெர்ட்கள், கேக் அலங்காரம், சாக்லேட் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வல்லுநராக மாணவர்களை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
-யாழினி வீரா