
ஈப்போ, 31 ஜனவரி — மலேசியாவின் உலகளாவிய உறவுகளை மேலும் வலுப்படுத்த, அடுத்த வாரம் பல முக்கியமான உலகத் தலைவர்கள் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
வருகைப்பெற இருக்கும் தலைவர்களில் உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி ஷவ்கத் மிரோமோனோவிச் மிர்சியோயேவ் மற்றும் துருக்கி ஜனாதிபதி ரிசெப் தாயிப் எர்டோகான் ஆகியோரும் உள்ளனர்.
“அமெரிக்காவில் இருந்து அதிக முதலீடுகளை ஈர்ப்பது, ஐரோப்பிய ஒன்றியத்துடன் (EU) உறவுகளை மேம்படுத்துவது மற்றும் சீனாவுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது மலேசிய அரசின் முக்கிய இலக்காக உள்ளது” என்று பிரதமர் அன்வார் தெரிவித்துள்ளார்.
இன்று பேராக் சீன வணிகக் கழகம் (PCCCI) நடத்திய சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பு விழாவில் உரையாற்றிய போது, அவர் இதனை உறுதிப்படுத்தினார்.
இந்நிகழ்வில் உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சாம்ப்ரி அப்துல் காதிர், வீடமைப்பு மற்றும் உள்ளூராட்சி வளர்ச்சி அமைச்சர் ன்கா கோர் மிங், அறிவியல், தொழில்நுட்ப, புதுமை அமைச்சர் சாங் லிஹ் காங், பேராக் முதல்வர் டத்தோஸ்ரீ சாராணி முகமது மற்றும் PCCCI தலைவர் டத்தோ லியூ சீ மெங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த முக்கியமான உலகத் தலைவர்களின் வருகை, மலேசியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும், சர்வதேச உறவுகளுக்கும் புதிய பாதையை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
– வீரா இளங்கோவன்