
கோலாலம்பூர், 28 ஜனவரி — சீனப்புத்தாண்டை முன்னிட்டு, இன்று முதல் பிப்ரவரி 2 வரை தலைநகரில் போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய 363 போலீசார் பணியில் ஈடுபடுவார்கள்.
ஓப் செலாமாட் 23 நடவடிக்கையின் போது, வாகனமோட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபடுவதைத் தவிர, விபத்து தடுப்பு நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்துவார்கள் என்று கோலாலம்பூர் காவல் துறை துணைத் தலைவர் டத்தோ அஸ்ரி அக்மார் ஆயோப் தெரிவித்தார்.
விபத்து மற்றும் நெரிசல் தடுப்பு:
வாகனப் போக்குவரத்து சீராகவும் கட்டுப்பாட்டிலும் இருக்க காவல் துறை அனைத்து முக்கிய இடங்களிலும் பணியில் ஈடுபட உள்ளது. ஜனவரி 24 முதல் பிப்ரவரி 2 வரை நடைபெறும் ஓப் லஞ்சார் சோதனை நடவடிக்கையில் விபத்துகள் அதிகம் ஏற்படும் பகுதிகளும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களும் அதிக கவனத்துடன் கண்காணிக்கப்படும்.
நெரிசல் மற்றும் விபத்து இடங்கள்:
கோலாலம்பூரில் அதிக நெரிசல் ஏற்படும் 50 இடங்கள் மற்றும் அதிக விபத்துகள் நிகழும் 11 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. புத்ரா ஜெயாவில் நெரிசல் ஏற்படும் 8 இடங்கள் மற்றும் விபத்துகள் நிகழும் 5 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
நேற்றிரவு புக்கிட் பிந்தாங்கில் சாலை பாதுகாப்பு இயக்கத்தை தொடங்கி வைத்தபோது, பொது மக்கள் பயணத்தை முன்னதாக திட்டமிட வேண்டும் என்றும், வாகனங்களை நல்ல நிலையில் வைத்திருப்பது உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் ஆலோசனை கூறினார்.
மேலும், பாதுகாப்பிற்காக விதிமுறைகளை கடைபிடித்து சகிப்புத்தன்மையுடன் செயல்பட பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டார்.
-வீரா இளங்கோவன்