
கோலாலம்பூர், 6 மார்ச் — தமிழ்ப்பள்ளிகளின் உருமாற்றத்திற்காக ஆண்டுதோறும் அரசாங்கம் மானியங்களை வழங்கி வந்தாலும், அது இன்னும் தேவையான அளவிற்கு இல்லை என மொழி சார்ந்த அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.
2025ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் வரவு செலவுத் திட்டத்தில், கல்வி அமைச்சிற்கு 6,400 கோடி ரிங்கிட் கூடுதலாக ஒதுக்கப்பட்டது. ஆனால், தமிழ்ப்பள்ளிகளுக்கான தனி ஒதுக்கீடு அதிகரிக்க வேண்டும் என மலேசிய தமிழ்க்கல்வி அரசு சாரா இயக்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் எம். வெற்றிவேலன் வலியுறுத்தினார்.
“தமிழ்ப்பள்ளிகளுக்கென மொத்த கல்வி நிதியில் 0.2% (12 கோடி ரிங்கிட்) ஒதுக்கினாலே போதுமானது. இது தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கு பெரும் ஆதரவாக அமையும்,” என்று அவர் கூறினார். தமிழ்ப்பள்ளிகளின் நிலையை மேம்படுத்த, மாணவர் சேர்க்கை குறைந்துள்ள பள்ளிகளை இடமாற்றம் செய்யும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, இடைநிலைப் பள்ளிகளில் தமிழ் மொழி மற்றும் இலக்கியப் பாடங்களை கற்கும் இந்திய மாணவர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறார்கள். “எஸ்பிஎம் தமிழ்மொழித் தேர்வில் மாணவர்கள் சிறப்பாக தேர்ச்சி பெறுகிறார்கள். இருப்பினும், ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் குறைந்த மாணவர் சேர்க்கை போன்ற காரணங்களால், இடைநிலைப் பள்ளிகளில் தமிழ் கற்பது சிக்கலாகிறது,” என்று வெற்றிவேலன் கவலை தெரிவித்தார்.
இந்நிலையில், பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற பல மாணவர்கள் வேலைவாய்ப்பிற்காக காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு நேர்முகத் தேர்வுகள் நடத்தி, இடைநிலைப்பள்ளிகளில் ஆசிரியராகவும் நியமிக்கலாம் என அவர் யோசனை முன்வைத்தார்.
இத்துடன், 42%-ஆக உயர்ந்துள்ள குறைவான மாணவர்கள் கொண்ட தமிழ்ப்பள்ளிகளை அதிக மாணவர்கள் உள்ள பகுதிகளுக்கு மாற்ற கல்வியமைச்சு முனைப்புக் காட்ட வேண்டும் என கூட்டமைப்பின் செயலாளர் அருண் துரைசாமி பரிந்துரைத்தார்.
மேலும், தமிழ்ப்பள்ளிகளில் பாலர் பள்ளிகள் அமைத்தல், இருமொழிப் பாடத்திட்டம் செயல்படுத்துதல், மலாய் மொழி பயிற்சி வழங்குதல் உள்ளிட்ட திட்டங்களை அரசு பரிசீலிக்க வேண்டும் என கூட்டமைப்பு வலியுறுத்தியது. கல்வியமைச்சில் இந்தியர்களின் பிரதிநிதியாக துணை அமைச்சர் நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
-வீரா இளங்கோவன்