Tazhal Media – தழல் மீடியா

/ Mar 15, 2025
Latest News
tms

பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் தொடக்கம்

Picture: Google

பழனி, 9 பிப்ரவரி — தமிழர் கடவுள் முருகப்பெருமானின் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும் தைப்பூச திருவிழா இந்த வருடமும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு திருவிழா பெண்ணாயகி அம்மன் கோவிலில் கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை 4 மணிக்கு நடை திறந்து, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர், காலை 7 மணிக்கு விநாயகர் பூஜை, புண்ணியாக வாசனம், மயூரையாகம் ஆகியவை நடைபெற்றன. வேல், மயில், சேவல், சந்திரன் உருவம் பொறிக்கப்பட்ட கொடிப்படம் கோவிலில் வலம் வந்தது.

10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில், தினமும் காலை முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை தந்தப்பல்லக்கில் ரதவீதிகளில் உலா வருகிறார்கள். இரவு 7.30க்கு மேல் வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளி காமதேனு, பெரிய தங்கமயில் உள்ளிட்ட வாகனங்களில் புறப்பாடு நடைபெறுகிறது.

நாளை (திங்கள்) முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் இரவு 7 மணிக்கு நடக்கிறது. அதன் பிறகு, இரவு 9 மணிக்கு வெள்ளிரதத்தில் பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார்கள். செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணிக்கு, சண்முகநதியில் தீர்த்தவாரி நடைபெறுகிறது. பின்னர் 11.15 மணிக்கு திருத்தேரில் எழுந்தருளி, மாலை 4.45 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். 14ஆம் தேதி தெப்பத்தேர் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.

பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் செய்துவரும் நிலையில், தமிழகம் முழுவதும் இருந்து பாதயாத்திரையாக பக்தர்கள் வந்துள்ளனர். திரண்டுள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசிக்க 5 மணி நேரம் வரை காத்திருக்கின்றனர். விழா ஒத்துவர 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

-வீரா இளங்கோவன்

Scroll to Top