Tazhal Media – தழல் மீடியா

/ Apr 23, 2026
Latest News
tms

சிங்கப்பூரில் மலேசியர் தட்சினாமூர்த்திக்கு தூக்கு தண்டனை!

சிங்கப்பூர், 22 செப்டம்பர்:
சிங்கப்பூரில் தண்டிக்கப்பட்டுள்ள மலேசிய குடிமகன் தட்சினாமூர்த்தி அ/ல் கட்டையாக்கு எதிராக வரும் தூக்கு தண்டனை செய்தி வெளிவந்துள்ளது. இவர் மீது 44.96 கிராம் டைமார்ஃபின் (ஹெராயின்) கடத்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நிலையில், வரும் வியாழக்கிழமை சிங்கப்பூர் சாங்கி சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

இந்த தகவலை சிங்கப்பூரின் பிரபல மனித உரிமை வழக்கறிஞர் திரு. ரவி தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் குறிப்பிட்டதாவது:

“தட்சினாமூர்த்தி நான் சந்தித்த மிக அமைதியான, அன்பான ஆன்மாக்களில் ஒருவர். அவரது தாயுடன் நான் பேசினேன். மகன் இன்னும் உயிரோடிருக்கும்போது இறுதிச்சடங்கு தயாரிக்க வேண்டிய அவலத்தை அந்த தாய் சொன்னபோது என் இதயம் நொறுங்கியது.”

திரு. ரவி மேலும் வலியுறுத்தியதாவது, சிங்கப்பூர் சிறை நிர்வாகம் கடந்த காலத்தில் தட்சினாமூர்த்தியின் இரகசிய கடிதங்களை சட்டவிரோதமாக Attorney-General’s Chambers-க்கு அனுப்பிய சம்பவம் நடந்தது. அதை நீதிமன்றம் சட்டவிரோதம் என தீர்ப்பளித்தாலும், இன்று அவர் மீது மரண தண்டனை அமல்படுத்தப்படுவது நீதி நடைமுறை குறைபாடு என்பதை வெளிப்படுத்துகிறது என்று கூறினார்.

மலேசிய மனித உரிமை அமைப்புகள் மற்றும் Singapore Anti-Death Penalty Campaign ஆகியவை தொடர்ந்து மரண தண்டனை ஒழிப்பு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றன.

மரண தண்டனை தொடர்பான விவகாரங்கள் மலேசியாவிலும் பெரும் கவலை எழுப்பி வரும் நிலையில், இந்த வழக்கு மீண்டும் #EndCrimeNotLife, #NotInMyName என்ற ஹாஷ்டேக்களுடன் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்படுகிறது.

-யாழினி வீரா

Scroll to Top