
மலேசியத் தினத்தை முன்னிட்டு, சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சு, வரும் செப்டம்பர் 12 முதல் 16 வரை தாமான் தித்தி வங்சாவில் மிகப்பெரிய அளவில் Festival Budaya Malaysia (FBM) நிகழ்ச்சியை நடத்த உள்ளது.
இந்த தேசிய பண்பாட்டு விழாவில், மலேசியாவின் பல இன, பல மொழிப் பாரம்பரியங்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. அதன் ஓர் அங்கமாக, ராதா கிருஷ்ணன் பைன்ட் ஆர்ட்ஸ் அமைப்பு, இந்திய கலாச்சாரத்தின் செழுமையை வெளிப்படுத்தும் விதமாக “கொண்டாட்டம்” எனும் சிறப்பு இந்திய பண்பாட்டு விழாவை நடத்த இருக்கிறது.
இவ்விழா தினமும் காலை 9.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை நடைபெற உள்ளது. ஐந்து நாட்கள் நீடிக்கும் இக்கொண்டாட்டத்தில் குறைந்தது 20,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பர் என ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் நளினி நம்பிக்கை தெரிவித்தார்.
நாட்டின் பிரபல கலைஞர்கள் டத்தோ எலிகேட் ஆறுமுகம், சந்தேஷ், டார்க்கி, லோக்காப் போன்றோர் மேடையேற்று மக்களை மகிழ்விக்க இருக்கின்றனர். அதோடு, பாரம்பரிய நிகழ்ச்சிகளாக சிலம்பாட்டம், உருளிமேளம், இந்திய நாட்டியங்கள் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன.

இவ்விழாவை சிறப்பிக்க மொத்தம் 2,000 கலைஞர்கள் பங்கேற்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மலேசிய சாதனையாளர் புத்தகத்தில் இடம்பிடிக்கும் வகையில் மிகப்பெரிய அளவில் இந்த திருவிழா வடிவமைக்கப்பட்டுள்ளது எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், விழாவில் சுற்றுலாதுறை அமைச்சர் டத்தோஸ்ரீ தியோ கிங் சிம் மற்றும் ஒற்றுமைத் துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல், சமூக தலைவர்களும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்கின்றனர்.
இந்த பண்பாட்டு விழா முழுமையாக இலவசம் என்பதால், அனைத்து தரப்பினரும் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு மலேசியாவின் பன்முக பண்பாட்டினை அனுபவிக்குமாறு ஏற்பாட்டுக் குழுவினர் மக்களிடம் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த விழாவை காண மொத்தத்தில் 50,000 முதல் 80,000 வரையிலான மக்கள் திரளுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
-யாழினி வீரா



