
பாயான் லெப்பாஸ், 5 மார்ச் — பினாங்கு பாயான் லெப்பாஸ் புக்கிட் ஜம்புல் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் குப்பைகள் கொட்டும் இடத்தில் 700-க்கும் மேற்பட்ட தோட்டாக்கள் அடங்கிய பை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல், அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் அந்த பையை கவனித்துவிட்டு, உடனடியாக போலீசாருக்கு தகவல் வழங்கியதாக தீமோர் லாவோட் போலீஸ் தலைவர் ஏசிபி அப்துல் ரோசாக் முகமது தெரிவித்தார்.
போலீசாரின் ஆரம்பக் கணிப்பின்படி, அந்த Kaliber .22 வகை தோட்டாக்கள் அடங்கிய பையை மர்ம நபர் அங்கு விட்டுச் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும் என ஏசிபி அப்துல் ரோசாக் தெரிவித்தார்.அத்துடன், 1960-ஆம் ஆண்டு சுடும் ஆயுதங்கள் சட்டத்தின் கீழ் இந்த விவகாரம் பல கோணங்களில் விசாரிக்கப்படுவதாக அவர் உறுதிப்படுத்தினார். இந்த சம்பவம் தொடர்பாக, பொதுமக்கள் எவருக்கும் கூடுதல் தகவல்கள் இருந்தால், உடனடியாக அருகிலுள்ள போலீஸ் நிலையங்களைத் தொடர்பு கொள்ளுமாறு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த தோட்டாக்கள் எவ்வாறு அங்கு வந்தது, யார் அதை கைவிட்டனர் என்பதற்கான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு காரணங்களால், மக்கள் இதுபோன்ற சந்தேகமான பொருட்களை கண்டால், தாமதிக்காமல் அதிகாரிகளுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
-இளவரசி புவனஷங்கரன்