
சென்னை, 17 — மறைந்த இசையமைப்பாளர் பவதாரிணியின் நினைவு நாளை முன்னிட்டு அவரது இறுதிப் படமான ‘புயலில் ஒரு தோணி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. பிப்ரவரி 12 அன்று பவதாரிணியின் பிறந்த நாளும் நினைவு நாளும் ஒரே நாளில் அமைந்துள்ளதால், இந்த நிகழ்வு உணர்ச்சிப் பெருக்கமாகவும் அமைந்தது.
இந்த விழாவில் இசைஞானி இளையராஜா, தமது மகள் பவதாரிணியின் நினைவுகளை பகிர்ந்து கொண்டு, “அவர் இந்த உலகை விட்டு செல்வதற்கு முன் என்னுடன் கழித்த நாட்கள் மறக்க முடியாதவை” என்று உருக்கமாக தெரிவித்தார்.
ஜலீல் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘புயலில் ஒரு தோணி’ திரைப்படத்தை ஈசன் இயக்கியுள்ளார். இதில் விஷ்ணுபிரகாஷ், அர்ச்சனா சிங், இளவரசு, ராதாரவி, நமோ நாராயணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பவதாரிணியின் இறுதிப் படமாக அமைந்துள்ள இந்த படத்திற்கு அவர் இசையமைத்துள்ளார்.
இந்த நிகழ்வில் கங்கை அமரன், இயக்குநர் வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா, கவிஞர் சினேகன், தயாரிப்பாளர் டி.சிவா, ஜெ.எம்.பஷீர் உள்ளிட்ட பலரும் பங்கேற்று, பவதாரிணிக்கு நினைவஞ்சலி செலுத்தினர்.
விழாவில் பவதாரிணி இதுவரை பாடிய பாடல்களை இளையராஜாவின் இசைக் குழுவினர் மீண்டும் வாசித்து இசைஞானியின் நினைவுகளை மேலும் நெகிழவைத்தனர்.
இளையராஜா பேசும் போது, “மகள் பவதாராணி கடைசியாக விருப்பபட்ட விசயம் பெண் இசைக்குழுவினரை உருவாக்குவது. இரண்டு நாள்களுக்கு முன்பு மலேசியாவில் இருக்கும்பொழுது இளம் மாணவிகள் இசைகுழுவினராக இருந்து என் முன்னர் பாடினார்கள். அதை பார்த்தவுடன் எனக்கு மகள் சொன்னதுதான் ஞாபகம் வந்தது. பவதாரனியின் பெயரில் பெண் இசைக்குழுவை தொடங்கவுள்ளேன். இதில் 15 வயதிற்கு மேற்போகாத பெண்கள் மட்டுமே இக்குழுவில் இருப்பார்கள். மலேசியாவிலிருந்தும் இருவரை தேர்வு செய்துள்ளேன். உலகம் முழுதும் மக்களுக்கு இசை விருந்து அளிக்ககூடிய வகையிலே இந்த குழுவை உருவாக்க திட்டமிட்டுள்ளேன். சரியான நேரம் வரும்போது மற்ற விவரங்களை அறிவிப்பேன். முறைப்படி தேர்வு செய்துதான் இந்த குழு உருவாக்கப்படும். பவதாரனியின் பெயர் என்றென்றும் நிலைத்திருக்கும் வகையிலே இந்த இசைக்குழு செயல்படும்.” என்றார்.
இறுதியாக பேசும்பொழுது, “அவர் பிறந்த நாளும் நினைவு நாளும் ஒரே நாளில் வந்துள்ளது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இது அவருடைய ஆத்மா சாந்தி அடைந்திருக்கிறது என்பதற்கான ஒரு நல்ல அடையாளம். பவதாரிணியின் இறுதிப் படத்தின் இசை வெளியீட்டு விழா இங்கே நடக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் கேட்டுக் கொண்டனர். இதை நான் மனதார வரவேற்கிறேன்” என உருக்கத்துடன் குறிப்பிட்டார்.
-வீரா இளங்கோவன்