
கிள்ளான், 25 மார்ச்: இந்திய தொழில் முனைவோர் வளர்ச்சியை உறுதிப்படுத்தும் நோக்கில் மலேசிய அரசு பல்வேறு உதவித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்கள் தொழில் முனைவோர்களுக்கு சென்றடைய, அவற்றைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஜெய சக்தி கூட்டுறவு கழகம் கிள்ளானில் தொழில் முனைவோர் கருத்தரங்கை நடத்தியது.
கிரிஸ்ட்டல் கிரான் தங்கும் விடுதியில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் 120 இந்திய தொழில் முனைவோர்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். தெக்கூன் உதவித் திட்டம், அமனா இக்தியார், எஸ்எம்இ, சக்கிம் போன்ற தொழில் உதவித் திட்டங்கள் ஒரே மேடையில் இணைக்கப்பட்டு, அவற்றின் பயன்பாடு, விண்ணப்ப முறை, செயல்பாடு, மற்றும் வணிக உத்திகள் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது.

தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணனின் தனிச் செயலாளர் டத்தோ அன்புமணி பாலன் இந்நிகழ்வை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார். சிறப்புரை ஆற்றிய அவர், முறையான பயிற்சி இல்லாததால் நமது இந்திய தொழில்முனைவோர்கள் தவறான நிர்வாகத்தால் பெரும் இழப்புகளை சந்திக்கின்றனர். இம்மாதிரியான சூழ்நிலைகளைத் தடுக்க தெக்கூன் மூலமாக மிக பெரிய திட்டத்தை டத்தோஸ்ரீ ஆர். ரமணன் அவர்கள் தொடக்கிவைக்க இருப்பதாகவும் இது தொழில் நிர்வாகத் திறனை வளர்க்க பேருதவியாக இருக்கும் எனவும் குறிப்பிட்டார். மேலும் கடன் உதவி பெற்ற தொழில்முனைவோர்கள் இம்மாதிரியான கருத்தரங்குகளில் கலந்துகொள்வதால், வணிக வளர்ச்சிக்கான திசையை உறுதிப்படுத்த முடியும் என்றார். அத்துடன், அண்மையில் ஐ-பேப் திட்டத்தின் கீழ் 48 இந்திய சிறு தொழில்முனைவோர்களுக்கு மொத்தமாக 2.96 மில்லியன் ரிங்கிட் மானியம் வழங்கப்பட்டுள்ளதும், இது தொழில்முனைவோருக்கான அரசின் அர்ப்பணிப்பை காட்டுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஜெய சத்தி கூட்டுறவுக் கழகத்தின் தலைவர் டத்தோ பாஸ்கரன், கழகம் கடந்த 75 ஆண்டுகளாக செயல்பட்டு வருவதையும், தற்போது 800க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டிருப்பதையும் தெரிவித்தார். மேலும், இதுபோன்ற கருத்தரங்குகளை மலேசியாவின் பிற மாநிலங்களிலும் விரைவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார். இந்திய தொழில் முனைவோர்கள் அரசாங்க உதவிகளை முறையாக அறிந்து பயன்பெற, இம்மாதிரியான கருத்தரங்குகள் பெரும் ஆதரவாக இருக்கும் என்பதையும் அவர் கூறினார்.

கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராவ் அவர்களின் பிரதிநிதியாக, கிள்ளான் நகராண்மைக் கழக உறுப்பினர் மற்றும் காப்பர் வட்டார இந்து சங்க தலைவர் திரு. அருள்நேசன் ஜெயபாலன் கலந்துக் கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். இன்றைய தொழில்துறையில் செயற்கை நுண்ணறிவு மிக அவசியம் என்பதையும், இந்திய தொழில்முனைவோர் தொழில்துறையில் முன்னேற செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த அதிகமாக ஆராய வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் கோலாலம்பூரைச் சேர்ந்த தொழில் முனைவோர்கள் இலவசமாக நடத்தப்பட்ட இக்கருத்தரங்கில் பங்கேற்று சந்தை தேவைக்கு ஏற்ப வணிகத்தை மேம்படுத்துவது குறித்து பயிற்சி பெற்றனர்.
-யாழினி வீரா