
கோலாலம்பூர், ஏப்ரல் 14: மலேசியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் பயிலும் இந்திய மாணவர்களின் விழிப்புணர்வை அதிகரிக்க, “புரட்சி இயக்கம்” ஏற்பாட்டில் மாபெரும் மாநாடு மிகுந்த எதிர்பார்ப்புடன் நடைபெற உள்ளது. இந்த மாநாடு ஏப்ரல் 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் பிரதமர் துறையின் ஆதரவுடன் இரண்டு நாள்கள் நடைபெறவுள்ளது.
புரட்சி இயக்கத்தின் தலைவர் உமாகாந்தன் கூறுகையில், இம்மாநாடு சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சூழ்நிலைகளில் இந்திய மாணவர்களுக்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.

இது ஒரு வழக்கமான மாநாடு அல்ல; மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தை வடிவமைக்க தேவையான தன்னம்பிக்கை, புரிதல் மற்றும் வழிகாட்டல்களை பெறக்கூடிய வாய்ப்பாக அமையும். இதில் பங்கெடுக்கும் மாணவர்களுக்கு தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதிகள் இலவசமாக வழங்கப்படும்.
மேலும், புகழ்பெற்ற பேச்சாளர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் தொழில் வெற்றி பெற்ற நபர்கள் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களை பகிர்வதோடு, மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கவுள்ளனர். அதே நேரத்தில், இந்திய மாணவர்களைச் சேர்ந்த பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் ஒரு சிறப்புப் பேரவையும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஸ்ரீ முருகன் நிலைய இயக்குநர் சுரேன் சுந்தா மற்றும் பல்வேறு சமூக ஆர்வலர்களின் ஆதரவுடன் இந்த மாநாடு சிறப்பாக நடைபெற இருக்கின்றது. மேலும், கோவில்களுக்கு வழங்கப்படும் மானியத்தில் ஒரு பகுதியை இந்திய மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என உமாகாந்தன் வலியுறுத்தியுள்ளார்.
இந்த மாநாட்டில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் “புரட்சி இயக்கம்”துடன் உடனடியாக தொடர்பு கொள்ளலாம்.
-வீரா இளங்கோவன்