Tazhal Media – தழல் மீடியா

/ Mar 15, 2025
Latest News
tms

தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து குறைவு!

Picture: Whatsapp

பெஸ்டாரி ஜெயா, 18 பிப்ரவரி — மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகளில் முதலாம் ஆண்டில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைவடைந்து வருவதால் சமூகத்தில் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. 2025 புதிய கல்வியாண்டில், நாட்டின் தமிழ்ப்பள்ளிகளில் இதுவரை 11,021 மாணவர்கள் முதலாமாண்டில் சேர்ந்துள்ளனர். இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 547 மாணவர்கள் குறைவாகும்.

சிலாங்கூரில் அதிகபட்சமாக 3,574 மாணவர்கள் சேர்ந்துள்ளதோடு, ஜோகூரில் 2,013 பேர், பேராக்கில் 1,615 பேர் இணைந்துள்ளனர். மேலும், நெகிரி செம்பிலானில் 1,038, கெடாவில் 923, பினாங்கில் 824, கோலாலம்பூரில் 523, பஹாங்கில் 285, மலாக்காவில் 217 பேர் சேர்க்கை பெற்றுள்ளனர். இதற்கு மாறாக, பெர்லிஸ் மாநிலத்தில் 8 மாணவர்களும், கிளந்தானில் ஒரே ஒரு மாணவரும் மட்டும் தமிழ்ப்பள்ளியில் சேர்ந்து உள்ளனர்.

முந்தைய ஆண்டுகளின் மாணவர் சேர்க்கையை நோக்கினால், 2023-ல் 11,712 பேர் முதலாமாண்டில் சேர்ந்திருந்த நிலையில், 2024-ல் இது 11,568 ஆக குறைந்தது. இவ்வாண்டு மேலும் 547 மாணவர்கள் குறைவாகத் தமிழ்ப்பள்ளிகளை தேர்வு செய்துள்ளனர்.

இந்த தொடர்ந்து சரிந்து வரும் நிலைக்கு பிறப்பு விகிதம் குறைவது முக்கியக் காரணமாக இருப்பதாக, மலேசியத் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் கழகத்தின் தலைவர் எஸ்.எஸ். பாண்டியன் தெரிவித்துள்ளார். இது தவிர, இந்தியர்கள் வாழும் சில பகுதிகளில் தமிழ்ப்பள்ளிகள் இல்லாததுடன், சீனப் பள்ளிகள், தேசியப் பள்ளிகள், அனைத்துலகப் பள்ளிகளின் மீதான பெற்றோரின் ஈர்ப்பும் ஒரு முக்கியக் காரணமாக உள்ளது. மேலும், சில தமிழ்ப்பள்ளிகளில் அடிப்படை வசதிகள் குறைவாக இருப்பதும் பெற்றோர்களை வேறு பள்ளிகளை தேர்வு செய்ய தூண்டுவதாகவும் அவர் கூறினார்.

தமிழ்ப்பள்ளிகளின் நிலைத்தன்மை கேள்விக்குறியாகி வரும் நிலையில், இந்நாட்டில் தமிழ்ப்பள்ளிகள் தொடர வேண்டும் என்றால், இந்தியப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிகளில் சேர்க்கும் முனைப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்று எஸ்.எஸ். பாண்டியன் வலியுறுத்தினார்.

-யாழினி வீரா

Scroll to Top