
பினாங்கு, 12 பிப்ரவரி — பினாங்கு தண்ணீர் மலை கோவில் என்றழைக்கப்படும் அருள்மிகு பாலதண்டாயுதபாணி தேவஸ்தானத்தில் தைப்பூச சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற தைப்பூச சிறப்பு நிகழ்ச்சிக்கு இலக்கவியல் அமைச்சர் கோபிந் சிங் டியோ கலந்துகொண்டார். கடந்த வருடங்களைப் போலவே இந்த வருடமும் பினாங்கு தண்ணீர் மலை கோவிலுக்கு கனிசமான நிதியை அவர் வழங்கினார்.
அதோடு இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அறிவிப்பும் செய்யப்பட்டது. மக்கள் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்த ஏதுவாகவும், மூலவரான அருள்மிகு பாலதண்டாயுதபாணியை, படியேறிச் சென்று நேரில் தரிசிக்க இயலாதவர்களுக்கு உதவும் நோக்கில், இங்கு மின் தூக்கி (லிப்ட் சேவை) உருவாக்கப்படும் என பினாங்கு முதலமைச்சர் உறுதிபடுத்தியிருப்பது தமக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக அமைச்சர் கோபிந் கூறினார்.
அதோடு, அமைச்சர் என்ற வகையில், இந்தத் திட்டம் விரைவில் வெற்றியடைய மத்திய அரசாங்கத்திடம் தேவையான உதவிகளைச் செய்யவும், முழு ஒத்துழைப்பு வழங்கத் தாம் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அதோடு, எந்த ஒரு நிதி உதவியும் எதிர்பாராமல், இந்தச் சேவையை வழங்க முன் வந்த டத்தோ ஸ்ரீ குமரேந்திரனின் மனப்பான்மையை தாம் மெச்சுவதாகவும், இது குறித்து தாம் பிரதமர் அன்வாரிடம் உடனடி பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
பினாங்கு மாநில ஜெலுதோங் நாடாளுமன்ற உறுப்பினரும் பினாங்கு இந்து அறப்பணி வாரியத் தலைவர் ஆர்.எஸ்.என் ராயர் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
இதில் பினாங்கு முதலமைச்சர் சௌ குவான் யாவ், மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம், துணை நிதி அமைச்சர் லிம் உய் யிங், ஒற்றுமைத் துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, பினாங்கு முன்னாள் முதலமைச்சர் லிம் குவான் எங், டத்தோ ஸ்ரீ குமரேந்திரன், தான் ஸ்ரீ லிம் கிட் சியாங், , பினாங்கு மாநில ஆட்சி குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தரராஜு சோமு, பினாங்கு மாநில ம.இ.கா தலைவர் டத்தோ தினகரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தான் ஸ்ரீ ரவி மேனன், சமுதாயத் தலைவர்கள், பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
ஒற்றுமையும் நல்லிணக்கமும் மலேசியாவின் அடையாளம் ஆகும். அனைத்து இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தைப் பேண, அவர்களின் சமூகப் பொருளாதார மேம்பாடு பாதுகாக்கப்பட வேண்டும் என அமைச்சர் திட்டவட்டமாகக் கூறினார்.
இனங்களின் முன்னேற்றமானது நாட்டின் வளர்ச்சிக்கு ஈடாய் இருக்கவேண்டும், குறிப்பாக இலக்கவியல் துறையில் மக்கள் தங்களை வளப்படுத்திக் கொள்ள இந்த மடானி அரசாங்கம் உறுதுணையாக இருக்கும் என அமைச்சர் தமதுரையில் தெரிவித்தார். இந்திய சமுதாயம் இலக்கவியல் துறையில் மேம்பட, இலக்கவியல் துறை தகுந்த உதவிகளையும் வழிகாட்டலையும் வழங்கும் என கோபிந் உறுதியளித்தார். கடந்த 2024-ஆம் ஆண்டு, தாம் ரிம 2 மில்லியன் நிதியை இந்தியர்களின் நலனுக்காக வழங்கியாத அமைச்சர் தெரிவித்தார். இது போன்ற நிதி, இந்திய சமுதாயத்துக்கு தாம் தொடர்ந்து வழங்கவிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்தத் தைப்பூசத் திருவிழாவின் போது, பெரும்பாலான இந்திய வணிகர்கள் மின்னியல் முறையில் வர்த்தகம் செய்வது சிறப்பு என கூறிய அமைச்சர், இம்முறை தமதமைச்சு மேலும் 2 மின்னியல் திரைகளை வழங்கியது தொட்டும் அமைச்சர் பேசினார். தண்ணீர்மலை கோவில் அடிவாரத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மலை உச்சியில் இருக்கும் மூலவர் தண்டாயுதமாணிக்கு நடைபெறும் அபிஷேகம் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது மக்களை ஈர்த்தது. அதோடு ட்ரோன் துணைகொண்டு பல இடங்களின் காட்சிகளும், நிகழ்வுகளும் மின்னியல் திரை வழி நேரடியாக மக்களுக்கு ஒளிபரப்பப்பட்டன.
-வீரா இளங்கோவன்