
கோலாலம்பூர், 19 பிப்ரவரி — நாட்டில் இன உறவுகளை பராமரிக்க தற்போது உள்ள சட்டங்களே போதுமானவை என்றும், இனப் பாகுபாடு தடுப்புச் சட்டம் போன்ற புதிய சட்டங்களை உருவாக்குவதற்குத் தேவையில்லை என்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டாகாங் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: “இன, மத, சமூக வேறுபாடின்றி நல்லிணக்கம் பேணப்படுவதற்கு தற்காலிக சட்ட அமலாக்கத்தை உறுதி செய்தாலே போதுமானது. அதற்கு வெளிப்படையான மற்றும் நீதியான நடைமுறைகள் அவசியம்.”
எனினும், வெறுக்கத்தக்க பேச்சுகள் மற்றும் சமூக இடைவெளிகளை ஏற்படுத்தும் செயல்களை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் ஏதேனும் திருத்தங்களை மேற்கொள்ள விரும்பினால், அமைச்சு அதனை முழுமையாக ஆதரிக்கும் என்றும் அவர் கூறினார்.
பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங், நாட்டில் இனவெறி சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இனப் பாகுபாடுகளை தடுக்க தனித்துச் சட்டம் கொண்டு வரவேண்டுமா என கேட்டபோது, அமைச்சர் இதற்கு விளக்கம் அளித்தார்.
“நாட்டில் இனப்பிரச்சினைகளை கட்டுப்படுத்த 10க்கும் மேற்பட்ட சட்டங்கள் ஏற்கனவே உள்ளன. 1984ஆம் ஆண்டு அச்சு மற்றும் வெளியீடு சட்டம், 1998ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம், 1948ஆம் ஆண்டு நிந்தனைச் சட்டம் உள்ளிட்ட பல சட்டங்கள் தற்போதும் அமலில் உள்ளன,” என்று அவர் கூறினார்.
அதே நேரத்தில், சமூக ஒற்றுமையை கெடுக்கும் எந்த விதமான செயலும் கடுமையாகக் கண்காணிக்கப்படும் என்றும், தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
அமைச்சரின் இந்த அறிக்கையால், புதிய சட்டம் கொண்டுவர வேண்டுமா என்பது குறித்து அரசாங்கம் இன்னும் தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும் தெரிகிறது.
-வீரா இளங்கோவன்