
பினாங்கு, 31 ஜனவரி — பினாங்கு கடல்சார் போலீசாரால் கடலில் கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் 801 தோட்டாக்கள், மாநிலத்தில் இயங்கும் பல கும்பல்களுக்கு விற்க திட்டமிடப்பட்டிருந்ததாக நம்பப்படுகிறது. இது ஒரு பெரிய ஆயுத கடத்தல் வலையமைப்பின் பங்காக இருக்கலாம் என பினாங்கு காவல்துறைத் தலைவர் ஹம்சா அகமது தெரிவித்துள்ளார்.
இதுவரை ஐந்து கைத்துப்பாக்கிகள், ஒரு M4 துப்பாக்கி மற்றும் 801 தோட்டாக்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வலையமைப்பு, அண்டை நாடுகளை தளமாகக் கொண்டதாக இருக்கலாம் என்றும், அதன் சில முக்கிய உறுப்பினர்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளதாக ஹம்சா கூறினார்.
“முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், பினாங்கில் உள்ள சில முக்கியக் கும்பல்கள் இதில் ஈடுபட்டிருக்கலாம்,” என அவர் தெரிவித்தார். இருப்பினும், விசாரணை இன்னும் நீடிக்கும் காரணத்தால் கூடுதல் தகவல்களை வழங்க முடியாது என்றும் கூறினார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 22 மற்றும் 57 வயதுடைய இரண்டு இந்தோனேசியர்கள் அடங்குவர். அனைவரும் பிப்ரவரி 3 வரை காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
போலீசார் பெராய் கடற்பரப்பில் பதிவு எண்கள் இல்லாத இரண்டு ஃபைபர் கிளாஸ் படகுகளை தடுத்து வைத்ததற்குப் பிறகு, நான்கு சந்தேக நபர்களும் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டனர்.
கடத்தல் வலையமைப்பின் பின்னணியில் உள்ள முக்கிய நபர்களை கண்டுபிடிக்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-யாழினி வீரா