Tazhal Media – தழல் மீடியா

/ Apr 23, 2026
Latest News
tms

ஏ.எம்.எல்.ஏ. சட்டம் மீறிய வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கடும் நடவடிக்கை தேவை – வான் அக்மத்

Picture: Online

கோலாலம்பூர், 22 அக். – மலேசியாவில் செயல்படும் சில வெளிநாட்டு நிறுவனங்கள், பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதி தடுப்பு சட்டமான (AMLA) 2001 விதிகளை மீறி வருகின்றன என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனைத் தொடர்ந்து, அரசாங்கம் இத்தகைய நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகாங் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் வான் அக்மத் பய்சால் வான் அக்மத் கமால் வலியுறுத்தினார்.

அவர் கூறியதாவது, சில வெளிநாட்டு நிறுவனங்கள் “விசிட் விசா”யில் நாட்டுக்குள் வரவழைக்கப்பட்ட தொழிலாளர்களை சட்ட விரோதமாக வேலைக்குக் கட்டாயப்படுத்தி வருகின்றன. இது மலேசியாவின் சட்டங்களையும் தொழிலாளர் நல விதிகளையும் வெளிப்படையாக மீறுவதாகும். இத்தகைய செயல் நாட்டின் நம்பிக்கையை குறைக்கும் ஒரு தீவிர பிரச்சனையாகும் என அவர் தெரிவித்தார்.

அரசாங்கம் இத்தகைய சம்பவங்களை சாதாரண குற்றமாகக் கருதாமல், தேசிய பாதுகாப்பை பாதிக்கும் ஒரு மோசமான செயலாகக் கருதி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். “சட்டத்தின் முன் யாரும் பெரியவர் இல்லை; மலேசியாவின் சட்டம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் சமமாகவே அமைய வேண்டும்,” என வான் அக்மத் பய்சால் கூறினார்.

இதற்கிடையில், துணை நிதியமைச்சர் லிம் ஹூய் யிங், நிதியமைப்பின் கீழ் உள்ள அனைத்து வழக்குகளும் சட்டப்படி விசாரிக்கப்படுவதாகவும், எந்தவொரு தரப்புக்கும் சலுகை அளிக்கப்படமாட்டாது என்றும் உறுதிப்படுத்தினார்.

இந்த விவகாரம், நாட்டின் நிதி அமைப்பின் நம்பிக்கையை பாதுகாக்க அரசாங்கம் மேலும் உறுதியுடன் செயல்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது.

-யாழினி வீரா

Scroll to Top