
தஞ்சோங் மாலிம், 8 ஏப்ரல்: சிலாங்கூர், லெம்பா பெரிங்கின் அருகே உள்ள வடக்கு-தெற்கு விரைவு சாலையில், தஞ்சோங் மாலிமில் இருந்து தெற்கே செல்லும் வழியில் இன்று மதியம் ஏற்பட்ட வாகன விபத்தில் ஒரு வங்கதேசத்தை சேர்ந்த தொழிலாளர் உயிரிழந்தார், மேலும் நான்கு மலேசியர்கள் காயமடைந்தனர்.
சம்பவம் குறித்து சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை உதவி இயக்குநர் அக்மட் முக்லிஸ் முக்தார் அளித்த தகவலின்படி, இந்த விபத்து மதியம் 1.27 மணியளவில் ஏற்பட்டதாகவும், இதில் ஒரு டிரெய்லர் லாரி, மூன்று டன் லாரி மற்றும் டொயோட்டா ரக கார் ஆகிய மூன்று வாகனங்கள் மோதியதாகவும் கூறினார்.
மூன்று டன் லாரியில் இருந்த 30 வயதான வங்கதேச நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், வயது 18 முதல் 52 வரையிலான மற்ற நால்வர் காயமடைந்த நிலையில் சுங்கை பூலோ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். சம்பவம் தொடர்பான மேல் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
-யாழினி வீரா