
பினாங்கு, 11 பிப்ரவரி — பினாங்கில் அமைந்துள்ள அருள்மிகு பலதண்டாயுதபாணி ஆலயத்தில், தைப்பூசம் 2025 சிறப்பாக கொண்டாடப்பட்டது. மலேசியா இலக்கவியல் அமைச்சரான கோபிந்த் சிங் தேவ், விழாவில் கலந்துகொண்டு, இந்த புனித நாளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
தைப்பூசம் என்பது இறைநற்கருணையை நாடி, நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி, முருகப் பெருமானுக்கு நன்றி செலுத்தும் ஒரு முக்கிய நாளாகும். பக்தர்களின் ஆர்வமும் அர்ப்பணிப்பும் எப்போதும் வெகுவாக கணிப்புக்குரியது. இந்த பண்டிகை, மலேசியாவின் பண்பாட்டு ஒற்றுமையின் ஓர் அடையாளம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
மலேசியா போன்ற பல்வேறு இன மக்கள் ஒன்றிணைந்து வாழும் நாடுகளில், ஒற்றுமையை நிலைநாட்டுவது முக்கியம். இதனை உறுதிப்படுத்த, சமூக, பொருளாதார வளர்ச்சி அனைவருக்கும் சென்றடைய வேண்டும்.
அரசாங்கம், மலேசியாவின் இந்திய சமுதாயத்திற்கு உதவ தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. 2024-ல், மொத்தம் RM2 மில்லியன், இந்திய சமூக அமைப்புகள், ஆலயங்கள் மற்றும் தமிழ்ப்பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது. இந்த ஆதரவு 2025-இலும் தொடரும் என அமைச்சர் உறுதி அளித்தார்.

தற்போது, நுட்பத்துறையின் வளர்ச்சி (செயற்கை நுண்ணறிவு, அனிமேஷன்) உலகளவில் கணிசமான வளர்ச்சி கண்டுள்ளது. மலேசியா தனது PKS (சிறு மற்றும், நடுத்தர தொழில்துறை) வளர்ச்சியை உறுதி செய்ய, டிஜிட்டல் வர்த்தகத்தை ஊக்குவிக்க தன்னுடைய முயற்சிகளை வலுப்படுத்தி வருகிறது. PKS-கள் மலேசியாவின் 97% வர்த்தகத்தை கொண்டுள்ளதால், இவர்கள் வளர்ச்சி கண்டால், மலேசியாவின் பொருளாதாரமும் முன்னேறும்.
இம்முறையும், பக்தர்களின் நலன் கருதி, அருள்மிகு பலதண்டாயுதபாணி ஆலயத்தில் இரண்டு பெரிய பல்லூடக திரைகள் அமைக்கப்பட்டன. இதன் மூலம், கூட்டநெரிசியில்லாமல் பக்தர்கள் விழாவை சுலபமாக முருகபெருமனை காண முடிந்தது. மேலும், குடிநீர் மற்றும் உணவுகள், இந்த ஆலய பக்தர்களுக்கும் மற்றும் பத்துமலை திருத்தலத்திற்கு வந்த பக்தர்களுக்கும் வழங்கப்பட்டன.
மேலும், “நமது முன்னேற்றத்திற்காக ஒற்றுமையை பேணுதல் அவசியம்” என்றார். நமது பண்பாட்டு விழாக்களை மற்ற சமூகத்தினருக்கு அறிமுகப்படுத்தவும், பரஸ்பர புரிதலை மேம்படுத்தவும், டிஜிட்டல் தளங்களை பயன்படுத்துவோம் என்று அமைச்சர் கோபிந்த் சிங் பக்தர்களை ஊக்குவித்தார்.
-வீரா இளங்கோவன்