
இந்தோனேசியா, 15 பிப்ரவரி — பொதுவாக ஒருவர் உயிரிழந்தால் உடனே அடக்கம் செய்யப்படும். ஆனால், இந்தோனேசியாவின் டோராஜன் இன மக்கள் உயிரிழந்தவர்களின் உடலை பல மாதங்களோ, கூடவே பல ஆண்டுகளோ வீட்டிலேயே வைத்திருப்பது ஒரு பாரம்பரிய வழக்கமாக தொடர்கின்றது.
மரணம் முடிவு அல்ல என்று நம்பும் இந்த இன மக்கள், இறந்தவர்களை உடனடியாக புதைக்காமல், அவர்கள் இன்னும் உயிருடன் இருப்பதைப்போலவே நடத்துகிறார்கள். உணவு, ஆடைகள், கூடவே வசிப்பதற்கான தனியான அறையும் ஏற்பாடு செய்து, அவர்களுடன் பேசிக் கொண்டும், உறவுகள் போல் நடத்திக்கொண்டும் இருப்பது அவர்களின் சடங்காகும்.
இந்த பழக்கம் மரணத்தால் ஏற்படும் துயரத்தை தாங்க முடியாது என்பதற்காகவே உருவானது. குடும்பத்தினர் இறந்தவரின் பிரிவை ஏற்றுக்கொள்ளும் வரை உடலை வீட்டிலேயே வைத்திருப்பது வழக்கமாக இருந்து வருகிறது.
இயல்பாக மாதங்களுக்குப் பின்பு பிரம்மாண்டமாக இறுதிச் சடங்கு நடத்தப்படும். செல்வாக்கை பொறுத்து இந்த சடங்கு மாறுபடும் – பணக்காரர்கள் இசை, நடனம், விருந்துடன் சிறப்பாக நிகழ்ச்சி நடத்துவர். அதேபோல், இறந்தவரின் ஆன்மா சாந்தி அடைய எருமைகளை பலியிட்டு பூசை செய்யப்படும்.
இதற்குப் பின்பு கூட, மானேனே என்ற சடங்கு தொடர்ந்து செய்யப்படும். புதைக்கப்பட்ட உடலை எடுத்து, புதிய ஆடைகள் அணிவித்து, புகைப்படம் எடுத்து, மரியாதை செலுத்துவர். இது முதியவர்களுக்கு அளிக்கப்படும் மரியாதை என கருதப்படுகிறது.
இந்த வழக்கம் பல நூற்றாண்டுகளாக தொடர்ந்துவரும் ஒரு தனிப்பட்ட பாரம்பரியமாக இருக்கிறது.
-வீரா இளங்கோவன்