
கோலாலம்பூர், செப்டம்பர் 19 – மலேசியாவின் நகரங்களை அறிவுசார்ந்த, நிலைத்தன்மை வாய்ந்த மற்றும் மக்கள்மையம் கொண்ட இடங்களாக மாற்றும் முயற்சியை அரசு வேகமாக முன்னெடுத்து வருவதாக மலேசிய வீடமைப்பு, உள்ளூராட்சி அமைச்சர் ந்கா கோர் மிங் தெரிவித்தார்.
ஸ்மார்ட்சிட்டி எக்ஸ்போ கோலாலம்பூர் 2025 நிகழ்வின் போது, அவர் கூறியதாவது:
செயற்கை நுண்ணறிவு (AI) நகர திட்டமிடல், வளர்ச்சி மற்றும் மேலாண்மையில் புரட்சியை ஏற்படுத்தி வருவதால், மலேசியா 2030க்குள் “AI நாடு” (AI Nation) என்ற இலக்கை அடைவதற்கான பணியில் உறுதியாக உள்ளது.
இந்த நோக்கில், வீடு மற்றும் உள்ளூராட்சி அமைச்சகம், டிஜிட்டல் அமைச்சகத்துடன் இணைந்து, உள்ளூராட்சி அமைப்புகள் (PBT) இடையே AI நகரங்கள் (AI Cities) முயற்சியை முன்னெடுத்து வருகிறது. இதன் மூலம் போக்குவரத்து கட்டுப்பாடு, பொதுப் போக்குவரத்து, வளவள ஒதுக்கீடு மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் நுண்ணறிவு முறைமைகள் செயல்படுத்தப்படுகின்றன.
அதேவேளை, Residensi Rakyat Programme (PRR), Rumah Mesra Rakyat (RMR) மற்றும் PRIMA போன்ற முக்கிய வீட்டு திட்டங்கள் சுற்றுச்சூழல் நட்பு வடிவமைப்பு, IoT சென்சார்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களுடன் மேம்படுத்தப்படுகின்றன.
“ஒரு வீடு என்பது வெறும் தங்குமிடம் அல்ல, அது மக்களின் கனவுகளின் அடையாளம். அதனால்தான் எங்கள் வீட்டு திட்டங்கள் இணைவு, வசதி, நிலைத்தன்மை ஆகியவற்றை மையமாகக் கொண்டுள்ளன,” என்று ஞா வலியுறுத்தினார்.
மேலும், 2023ல் அறிமுகமான Smart City Rating Programme-இல் இதுவரை 82 உள்ளூராட்சி கவுன்சில்கள் இணைந்துள்ளன. சீனாவின் குவிலின் பயணத்திலிருந்து பெற்ற அனுபவத்தின் அடிப்படையில், பெராக் மற்றும் பினாங்கில் ஸ்மார்ட் சிட்டி கட்டளை மையங்கள் தொடங்கப்பட உள்ளன.
மலேசியா விரைவில் Smart City Expo World Congress (SCEWC)-இன் தென்கிழக்கு ஆசிய பதிப்பையும் நடத்தவுள்ளது.
நிகழ்வில் டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் தேவ், கோலாலம்பூர் மேயர் டத்தோ ஸ்ரீ டாக்டர் மைமூனா முகமட் ஷரீப் மற்றும் VCI-Global நிறுவனத்தின் தரவு அதிகாரி டாக்டர் சான் வை முன் ஆகியோர் பங்கேற்றனர்.
-யாழினி வீரா



