Tazhal Media – தழல் மீடியா

/ May 02, 2025
Latest News
tms

இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம்: 15 மாதங்களுக்குப் பிறகு அமைதி

கடந்த 15 மாதங்களாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நடந்து வந்த போருக்கு நிறுத்தம் கிடைத்துள்ளது. அமெரிக்கா, எகிப்து, மற்றும் கத்தார் போன்ற நாடுகளின் முயற்சிகளால், இரண்டு தரப்பும் சில நிபந்தனைகளுடன் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்தன.

இந்திய நேரப்படி பகல் 12 மணிக்குப் போர் நிறுத்தம் அமலுக்கு வரும் என கத்தார் அறிவித்த நிலையில், ஹமாஸ், தங்களிடம் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவிக்க ஒப்புதல் அளித்தது. இதேபோல், இஸ்ரேல் அரசு, தங்களிடம் உள்ள ஹமாஸ் கைதிகளை விடுவிக்கத் தீர்மானித்தது.

ஆனால், பினைக் கைதிகளின் விவர பட்டியலை வெளியிடாததால் சில தாமதங்கள் ஏற்பட்டன. பின்னர், ஹமாஸ் விடுவிக்கவுள்ள மூன்று பிணைக் கைதிகளின் விவரங்களை இஸ்ரேலுக்கு வழங்கியது. இதற்குப் பிறகு, இந்திய நேரப்படி பிற்பகல் 2.45 மணிக்கு போர் நிறுத்தம் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்தது.

இந்த போரில், 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கி, காசாவில் இருந்து 46,000 உயிரிழப்புகள் நிகழ்ந்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இச்சூழ்நிலையில், 15 மாதங்களுக்கு பின்னர் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே ஆறு வாரங்களுக்கான அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. கத்தார் பிரதமர், இரு தரப்பும் இந்த காலத்தில் அமைதியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் உட்பட மூன்று அமைச்சர்கள் பதவி விலகினர்.

-வீரா இளங்கோவன்

Scroll to Top