
கொத்தா கினாபாலு, 30 மார்ச் : தெலுபிட் சுகாதார நிலையம் முன்பாக இன்று காலை நிகழ்ந்த பயங்கர விபத்தில் ஆறு மாதக் குழந்தை உட்பட இருவர் உயிரிழந்தனர். இந்த வாகனத்தில் ஏழு பேர் பயணித்திருந்ததாக தகவல் தெரிவிக்கிறது.
பெலூரான் தீயணைப்புத் துறை (BBP) நிலையத் தலைவர் எடோன் மைக்கேல் தெரிவித்ததாவது, “விபத்து குறித்து காலை 6.28 மணிக்கு தகவல் கிடைத்ததும், ஆறு வீரர்கள் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சம்பவ இடத்திற்குத் துரிதமாக பயணித்தனர்.”
“இந்த விபத்தில் சிக்குண்ட நான்கு பெரியவர்கள், இரண்டு குழந்தைகள் மற்றும் ஒரு ஆறு மாதக் குழந்தை ஆகியோரை அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக காப்பாற்றி மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றனர். இதில் குழந்தை மற்றும் இன்னொரு நபர் பரிதாபமாக உயிரிழந்தனர்,” என்று அவர் கூறினார்.
மற்ற ஐந்து பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன. சம்பவ இடத்தில் மேலும் எந்தவித அபாயமும் இல்லை என்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, தீயணைப்பு குழுவின் மீட்புப் பணிகள் காலை 8.30 மணிக்கு முடிவுக்கு வந்தன.
தகவலின்படி, இந்த குடும்பம் ஹரிராயா கொண்டாடுவதற்காக லாபுவானிலிருந்து செம்போர்னாவிற்குப் பயணித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
-முல்லை மலர் பொன் மலர் சோழன்