
சென்னை, 17 ஏப்ரல்: தமிழகத்தில் இனி அனைத்து அரசாணைகளும் தமிழில் மட்டுமே வெளியிடப்பட வேண்டும் என மாநில அரசு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதற்காக, ஆங்கிலத்தில் தயாரிக்கப்படும் அரசாணைகள் தமிழாக்கம் செய்யப்பட்டு, அதிகாரப்பூர்வமாக தமிழில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசு ஊழியர்கள் தமிழில் மட்டுமே கையெழுத்திட வேண்டும் என்றும், பொதுமக்களிடமிருந்து தமிழில் வரும் மனுக்களுக்கு அதே மொழியிலேயே பதிலளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள், சமீபத்தில் பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தமிழ்நாட்டில் தமிழ் பயன்பாடு குறைவாக உள்ளது என தெரிவித்ததையடுத்து எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, பிரதமர் மோடி “தமிழகத்திலிருந்து வரும் கடிதங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் தான் இருக்கின்றன” என தெரிவித்திருந்தார்.
மேலும், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் போன்ற அனைத்திலும் பெயர்ப் பலகைகள் தமிழில் இருக்க வேண்டும். இல்லையெனில் அபராதம் விதிக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை இந்த உத்தரவுகளைச் செயல்படுத்தும் பொறுப்பை வகிக்கிறது என்றும், மொழிபெயர்ப்பு பிரிவின் மூலம் அனைத்துத் துறைகளின் ஆணைகள் தமிழாக்கம் செய்யப்படும் என அரசு தெரிவித்துள்ளது.