
பினாங்கு, நவ 13 – பினாங்கின் நிபோங் தேபால் பகுதியில் அரசு வழங்கும் மானிய எண்ணெயை சட்டவிரோதமாக சேமித்து விற்பனை செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கை உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்வாதாரச் செலவு அமைச்சின் (KPDN) பெனாங்கு பிரிவால் மேற்கொள்ளப்பட்டது.
“ஆப்ஸ் டிரிஸ் 3.0” என்ற பெயரில் நடத்தப்பட்ட சோதனையில், சந்தேக நபர் சட்டபூர்வ அனுமதியின்றி பெரிய அளவில் மானியப் பெற்ற சமையல் எண்ணெயை சேமித்து வணிக நோக்கில் பயன்படுத்தி வந்தது கண்டறியப்பட்டது. அதிகாரிகள் சோதனையில் மொத்தம் 5,720 கிலோ மானிய எண்ணெய் பாக்கெட்டுகள், 25 பெரிய பாட்டில்கள் மற்றும் பல வெற்று பொதிகள் பறிமுதல் செய்தனர். மேலும், இரண்டு பெரிய டங்குகளில் சுமார் 150 லிட்டர் எண்ணெய் நிரப்பப்பட்டிருந்தது.
விசாரணையில், அந்த நபர் கடந்த மூன்று மாதங்களாக சட்டவிரோதமாக மானிய எண்ணெயை வாங்கி விற்பனை செய்து வந்ததாக தெரியவந்தது. கைது செய்யப்பட்ட நபரின் வயது சுமார் 40 ஆகும். சம்பவம் தொடர்பாக 1961 ஆம் ஆண்டு சப்ளை கட்டுப்பாடு சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது.
எண்ணெய் மோசடி நடவடிக்கைகள் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரசின் நிவாரணத்தையும் சந்தை நிலையும் பாதிக்கும் வகையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மக்கள் இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்த தகவல்களை உடனடியாக தெரிவிக்குமாறு அமைச்சகம் கேட்டுக்கொண்டது.
அரசு வழங்கும் மானியப் பொருட்களை தவறாக பயன்படுத்தும் நபர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்றும், இதுபோன்ற மோசடிகளை முற்றிலும் ஒழிக்க எஸ்பெஷல் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
-யாழினி வீரா



