
ஜெனீவா, செப் 19 – சுமார் 11 ஆண்டுகள் கழித்து, ஸ்பெயின் ஆண்கள் கால்பந்து அணி மீண்டும் FIFA உலக தரவரிசையில் முதலிடத்தை கைப்பற்றியுள்ளது. இதன்மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த அர்ஜென்டினாவின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளது.
அர்ஜென்டினா சமீபத்தில் 2026 உலகக்கோப்பை CONMEBOL தகுதி சுற்றில் எக்வடாரிடம் 0-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. மார்ச் மாதத்திலேயே அவர்கள் உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றிருந்தாலும், இறுதிச்சுற்றில் அந்த தோல்வி தரவரிசை வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தது. இதனால் அர்ஜென்டினா மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டு, பிரான்ஸ் இரண்டாம் இடத்தை பிடித்தது.
ஸ்பெயின் தனது தகுதிச்சுற்று பயணத்தை பல்கேரியாவை 3-0 என்ற கணக்கில் வென்றும், துருக்கியை 6-0 என்ற பெரும் கணக்கில் வீழ்த்தியும் தொடங்கியது. இதுவே அவர்களை உச்சிக்குக் கொண்டு சென்ற முக்கிய வெற்றிகள் எனக் கருதப்படுகிறது. கடைசியாக 2014 ஜூன் மாதத்தில், உலக மற்றும் ஐரோப்பா சாம்பியன் பட்டம் பெற்றிருந்த போது, ஸ்பெயின் முதலிடத்தில் இருந்தது.
பிரான்ஸ் அணி கூட தங்களின் தகுதி ஆட்டங்களில் யுக்ரைனை 2-0, ஐஸ்லாந்தை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி வலுவான தொடக்கம் பெற்றுள்ளது. இதேநேரத்தில், இங்கிலாந்து நான்காவது இடத்தில் நீடிக்கிறது. போர்ச்சுகல், பிரேசிலை முந்தி ஐந்தாவது இடத்துக்குக் கூடியுள்ளது. அதன்பின் பிரேசில், நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் ஆறாம், ஏழாம் மற்றும் எட்டாம் இடங்களில் உள்ளன.
குரோஷியா மற்றும் இத்தாலி முறையே ஒன்பதாம், பத்தாம் இடங்களில் உள்ளன. ஜெர்மனி தங்களின் செயல்திறன் குறைவால் 12ஆவது இடத்திற்கு சரிந்துள்ளது.
சிலோவாகியா ஆச்சரிய வெற்றியைப் பெற்றுள்ளது. அவர்கள் தங்களின் மைதானத்தில் ஜெர்மனியை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தியதன் மூலம், 10 இடங்கள் உயர்ந்து 42ஆவது இடத்தை பிடித்துள்ளனர்.
-ஸ்ரீ



