
கோலாலம்பூர், மே 10: தகவல் தொடர்பு துறை அமைச்சர் டத்தோ பாமி பட்சில், கெஅடிலான் கட்சியின் உச்சமன்ற பதவிக்காக போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றி வரும் பாமி, கடந்த 25 ஆண்டுகளாக கட்சியில் ஊக்கமுடன் செயற்பட்டு வந்த முக்கியத் தலைவர்களில் ஒருவர்.
நேற்று (வெள்ளிக்கிழமை), அவர் தனது வேட்புமனுவை கட்சித் தலைமையகத்தில் தாக்கல் செய்தார். இம்முறை கட்சித் தேர்தலில், மக்கள் நீதிக் கட்சியின் தலைமைத்துவக் குழுவான MPP-விற்கான வேட்பாளராக பாமி போட்டியிடுகிறார்.
“இந்த முடிவை என் தனிப்பட்ட நிலைப்பாட்டுக்காக எடுத்தது இல்லை. ஆனால், கெஅடிலானின் சீர்திருத்தப் போராட்டத்தின் மீதான எனது உறுதியால் தான் இந்நிலையில் நிற்கிறேன்,” என அவர் தெரிவித்தார்.
1998ம் ஆண்டு முதல், தர்மம், நேர்மை மற்றும் விடாமுயற்சியை பிரதிநிதிப்படுத்தும் இயக்கத்தில் அவர் முக்கிய பங்கு வகித்து வருகிறார். “தெருக்களில் இருந்து புத்ராஜெயா வரை, நியாயத்தை தேடி போராடிய ஒரு சாதாரண போராளி என்ற வகையில், இப்போது கட்சியின் உயர் பொறுப்பிற்கான பதவிக்கே நானும் தயாராக இருக்கிறேன்,” என்றார் பாமி.
“கெஅடிலான் என்பது வெறும் கட்சி அல்ல, இது ஒரு கொள்கை இயக்கம். அதனாலேயே, கட்சியின் உள்ளமைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கும், நீதி சார்ந்த அரசியலை வளர்த்தெடுக்கவும் உங்கள் ஆதரவை எதிர்நோக்குகிறேன்,” என அவர் உருக்கமாக தெரிவித்தார்.
கட்சியில் தற்போது கடும் போட்டி நிலவுகின்ற நிலையில், பாமியின் வேட்புமனு கட்சித் தலைமையகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-யாழினி வீரா