
மிலான், ஜூன் 11: நான்கு முறை உலகக் கோப்பை வென்றுள்ள இத்தாலி தேசிய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை கிளாடியோ ரானியேரி மறுத்துள்ளார். இத்தாலி அணி லூசியானோ ஸ்பாலெட்டியை பணி நீக்கம் செய்ததையடுத்து காலியாக இருந்த பதவிக்கு, ரானியேரிக்கு அழைப்பு வந்தது.
76 வயதான ரானியேரி கடந்த சீசனில் ரோமா கிளப்பின் பயிற்சியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். தற்போது அந்த அணியின் மூத்த ஆலோசகராக பணியாற்றுகிறார். இத்தாலி கால்பந்து கூட்டமைப்புத் தலைவர் காப்ரியேலே கிரவினா வழங்கிய அழைப்புக்கு நன்றி தெரிவித்து, “இத்தாலி அணியின் தலைமைப்பயிற்சியாளர் பதவிக்கு அழைக்கப்பட்டதை பெருமையாக கருதுகிறேன். இருப்பினும், எனது தற்போதைய பொறுப்பை தொடர முடிவு செய்துள்ளேன்,” என்கிறார் ரானியேரி.
ரோமா உரிமையாளர் ஃப்ரைட்கின் குடும்பம் தனது முடிவுக்கு முழுமையான ஆதரவை வழங்கியதாகவும் அவர் கூறினார்.
படையில், ரானியேரியின் வழிகாட்டுதலால் ரோமா அணியானது கடந்த சீசனில் இத்தாலி லீக்கில் ஐந்தாவது இடத்தைப் பிடித்து, யூரோபா லீக்கிற்குத் தகுதி பெற்றது.
ரானியேரியின் பதவிக்கு மாற்றாக, முன்னாள் அட்டலாண்டா பயிற்சியாளர் ஜியான் பியரோ காஸ்பெரினி ரோமா அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-ஸ்ரீ



