
சென்னை, 9 மார்ச் — ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் நேற்று வாழ்த்துகளை தெரிவித்திருந்த நிலையில், தவெக தலைவர் விஜய் தனது மகளிர் தின வாழ்த்து வீடியோவை வெளியிட்டார்.
அதில், “தமிழ்நாட்டின் பெண்களை என் குடும்பத்தினராக நினைக்கிறேன். அவர்களின் பாதுகாப்பு மிக முக்கியம். ஆனால், திமுக அரசு பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யவில்லை. நாம் அனைவரும் சேர்ந்து தேர்ந்தெடுத்த ஆட்சி, இன்று நம்மை ஏமாற்றிவிட்டது. மாற்றம் அவசியம். 2026 சட்டமன்ற தேர்தலில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த அரசை மாற்றுவோம்” என்று விஜய் தெரிவித்துள்ளார்.
மகளிர் தின வாழ்த்தில், அரசியல் முக்கியத்துவம் பெற்றுவிட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசின் நலத்திட்டங்களை பட்டியலிட்டு மகளிர் தின வாழ்த்தினால், விஜய் நேரடியாக திமுக ஆட்சியை விமர்சித்து, மாற்றத்துக்கான உறுதிமொழி கேட்டுள்ளார். 2026 தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசியல் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
-யாழினி வீரா