Tazhal Media – தழல் மீடியா

/ Jul 22, 2026
Latest News
tms

ரி.ம 3 இலட்சம் அபகரித்த ஒப்பந்ததாரருக்கு 5 மாத சிறை & அபராதம்

கோலாலம்பூர், 12 செப்டெம்பர் – சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பு ஒரு வியாபாரியின் ரி.ம 3 இலட்சம் பணத்தை தனது நிறுவன வங்கிக் கணக்குக்கு மாற்றியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒப்பந்ததாரர், இன்று கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் குற்றம் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து, நீதிபதி அஸ்ரூல் தருஸ், குற்றவாளி முகமது ஹில்மி ஸஹிதி (38)க்கு ஐந்து மாதங்கள் சிறைத்தண்டனை மற்றும் ரி.ம 10,000 அபராதம் விதித்தார். மேலும், அபராதம் செலுத்தத் தவறினால், கூடுதலாக மேலும் ஐந்து மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் உத்தரவிட்டார்.

குற்றவாளி, கடந்த மே 6ஆம் தேதி, இங்குள்ள துன் சம்பந்தன் சாலையில் உள்ள ஓர் கஃபேவில், 43 வயது வியாபாரியிடமிருந்து ரி.ம 3 இலட்சம் பணத்தை எடுத்து, தனது “டி.ஜே ஹார்ட்வேர் என்டர்பிரைஸ்” நிறுவன வங்கிக் கணக்கில் செலுத்தியதாக கூறப்பட்டுள்ளது. அந்த தொகை தனது சொந்த பணம் அல்ல என்பதை அறிந்திருந்தும், தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இக்குற்றம் குற்றவியல் சட்டம் பிரிவு 424ன் கீழ் வருவதால், அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

வழக்கில், துணை பொது வழக்குரைஞர் எம். சரவணன், கடுமையான தண்டனை விதித்து, பிறருக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். வழக்கறிஞர் இல்லாத முகமது ஹில்மி, அபராத தண்டனைக்காக மட்டும் மனு செய்தார்.

-யாழினி வீரா

Scroll to Top