
சென்னை: இந்தியா முழுவதும் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மத்திய அரசால் விரைவில் தொடங்கப்பட இருக்கின்றன. இது கடந்த 50 ஆண்டுகளாக கல்வி, சுகாதாரம் மற்றும் மக்கள் தொகை கட்டுப்பாட்டில் சிறப்பாக செயல்பட்ட தமிழகம் மற்றும் இதர தென் மாநிலங்களுக்கு நியாயமற்ற தண்டனையாகும் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
வட மாநிலங்களில், குறிப்பாக உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் தொகுதிகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் தென் மாநிலங்களில் தொகுதிகள் குறைக்கப்படும் நிலை உருவாகலாம். இது ஜனநாயக சமத்துவத்திற்கு எதிரானது என்றும், எந்த வகையிலும் ஏற்க முடியாதது என்றும் அவர் வலியுறுத்தினார்.
பார்லிமென்ட் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டும் ஒரு தீர்வாக இருக்க முடியாது. மாறாக, பார்பட்சமற்ற தேர்தல் நடைமுறைகள், மாநிலங்களுக்கு நியாயமான நிதிப் பகிர்வு ஆகியவை முக்கியமானவை. பார்லிமென்ட் செயல்பாடுகளில் தேவையான சீர்திருத்தங்களை மேற்கொள்ளாமல் தொகுதி மாற்றங்களை மட்டும் செயல்படுத்துவது தவறான முடிவுகளுக்கு வழிவகுக்கும் என அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த மறுசீரமைப்பு தமிழக நலனுக்கு எதிராக செயல்படும் சூழ்நிலையில், அனைத்து தமிழக அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும். மத்திய அரசு, மாநிலங்களின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் மட்டுமே இறுதி முடிவை எடுக்க வேண்டும் என விஜய் வலியுறுத்தினார்.