
ஷா ஆலாம், 5 மே: ஷாஅலாமில் நடைபெற்ற இந்தியர் ஒற்றுமை விழாவில் பேசிய மலேசிய இந்திய மக்கள் கட்சியின் (MIUP) தேசிய தலைவர் புனிதன் பரமசிவம், கோயில்கள் தொடர்பாக “ஹராம்” எனும் வார்த்தையை அரசு துறைகள் மற்றும் நிறுவனங்கள் பயன்படுத்துவது ஏனைய சமுதாயத்தினரின் மத உணர்வுகளை காயப்படுத்துவதாகக் கூறினார்.
அந்த வார்த்தைக்கு தடை விதிக்கக் கோரி பிரதமருக்கு எழுத்துப்பூர்வமாகக் கடிதம் வழங்கியிருந்தும், இதுவரை எந்தவொரு பதிலும் வராதது மிகவும் வேதனைக்குரியதாகவும், கவலையளிக்கும் வகையிலும் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
“தேசிய கூட்டணியின் உறுப்புக் கட்சியாக இருக்கும் எங்கள் மலேசிய இந்திய மக்கள் கட்சி, இந்து சமயத்திற்கு எதிரான எந்தவொரு நடவடிக்கையையும் ஏற்கமாட்டோம். தேசியக் கூட்டணியில் பெரும்பான்மையாக மலாய் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இருப்பது உண்மைதான். ஆனால், அதற்கிடையில் எங்கள் சமூக உரிமைகளும் மத மரியாதையும் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம்,” என்று அவர் வலியுறுத்தினார்.
இது தொடர்பாக அரசு மற்றும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உடனடி நடவடிக்கை எடுத்து, “ஹராம்” எனும் வார்த்தையை கோயில்களுடன் தொடர்புபடுத்தும் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த விவகாரம் நாடளாவிய முறையில் சர்ச்சையை உருவாக்கி வரும் நிலையில், இந்தியர் சமூகத்தின் உணர்வுகளை அரசு கவனிக்க வேண்டும் என புனிதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
-யாழினி வீரா