
கோலாலம்பூர், 23 ஏப்ரல்: தமிழ் திரைப்பட இசைத்துறையில் முக்கியத்துவம் வாய்ந்த பெயராக திகழும் இசையமைப்பாளர் வித்யாசாகர், தனது இசைக்குழுவுடன் இணைந்து இரண்டாவது முறையாக மலேசியா தரையில் மேடை இறங்க உள்ளார்.
புகழ்பெற்ற இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான், ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் ஆகிய முன்னணி இசையமைப்பாளர்களின் பாதையில், உலகம் முழுவதும் இசைநிகழ்ச்சிகளை நடத்தும் கலாசாரத்தில், வித்யாசாகரும் தன்னை நிலைநாட்டி வருகின்றார்.
இந்த இசை நிகழ்ச்சி “The Name is Vidyasagar – Revisit” எனப் பெயரிடப்பட்டு, வருகிற 2025ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் திகதி சனிக்கிழமையன்று, மாலை 7 மணிக்கு புக்கிட் ஜாலில் Axiata அரங்கில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வை மலேசியாவின் பிரபல வெனஸ் புரொடக்ஷன் நிறுவனம் ஏற்பாடு செய்யும் நிலையில், முதன்மை ஆதரவாளராக லிட்டில் இந்தியா ஜுவல்லர்ஸ் நிறுவனம் பங்கேற்கிறது. கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, “Revisit” நிகழ்ச்சி இரட்டிப்பு உற்சாகத்துடன் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“ViBE KiNG is BACK!” என விழாக்குறியீடு தெரிவிக்கப்படுவதுடன், இசையை நேசிக்கும் ரசிகர்களின் உள்ளங்களை உற்சாகத்தில் மூழ்கடிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் உறுதியளித்துள்ளனர்.
தமிழ் திரையிசையில் புகழ்பெற்ற பின்னணிப் பாடகர்கள் மற்றும் பாடகிகள் இந்த நிகழ்வில் வித்யாசாகருடன் இணைந்து மேடையேறவுள்ளனர். “GOOSEBUMPS GUARANTEED” என உறுதியுடன் அறிவிக்கப்பட்டுள்ள இந்த இசைநிகழ்ச்சி, மலேசிய இசை ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாகும் என்பது உறுதி.

வரும் மே 5-ஆம் தேதி முதல் www.ticket2u.com.my என்ற அகப்பக்கத்தில் நுழைவு டிக்கேட்டுகளை மக்கள் வாங்கலாம் என தேரிவிக்கப்பட்டுள்ளது.
-யாழினி வீரா