
கோலாலம்பூர், 24 செப். – பினாங்கு மாநில இந்தியர் பெண்கள் கால்பந்து அணி, வரவிருக்கும் வார இறுதியில் இரண்டு முக்கியமான நட்புமுறை போட்டிகளில் பங்கேற்று, தங்கள் திறமையையும் உறுதியையும் வெளிப்படுத்தத் தயாராகியுள்ளது.
முதல் போட்டி, செப்டம்பர் 27ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு, ஷா ஆலமில் அமைந்துள்ள Lakeside Training Center திடலில் நடைபெற உள்ளது. இங்கு பினாங்கு பெண்கள் அணி, சிலாங்கூரின் Future FA கிளப் அணியை எதிர்கொள்கிறது. இதை முன்னிட்டு, அணியின் ஒற்றுமை, தன்னம்பிக்கை மற்றும் விளையாட்டு நெறிகளை மேம்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, மறுநாள் அதாவது செப்டம்பர் 28ஆம் தேதி, சிலாங்கூர் மாநிலத்தின் Kompleks Sukan SUK Selangor அரங்கில், பினாங்கு மாநில பெண்கள் அணி மற்றும் Selangor Soccer School மாணவிகள் மோதுகின்றனர். இது வெறும் ஒரு நட்புமுறை போட்டி மட்டுமல்லாமல், நாட்டின் இந்திய இளம் பெண்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும், சமூகத்தில் விளையாட்டின் மூலம் பெண்களின் பங்கைக் கௌரவிக்கவும் ஒரு அரிய தளமாக அமைவதாகக் கூறப்படுகிறது.

பினாங்கு இந்தியர் கால்பந்து கிளப் தலைவர் ஸ்ரீ சங்கர், “இத்தகைய போட்டிகள் பெண்களின் தன்னம்பிக்கையை உயர்த்துவதோடு, குழு பண்பை வளர்க்கவும், வருங்காலத்தில் மலேசியா அளவிலான பெரும் சாதனைகளுக்கான பாதையை அமைக்கவும் உதவும். எனவே, அனைத்து கால்பந்து ரசிகர்களும் தங்கள் குடும்பத்தினருடன் வந்து இளம் பெண்களை உற்சாகப்படுத்த வேண்டுகிறேன்,” என்று வலியுறுத்தினார்.
அவர் மேலும், பெண்கள் விளையாட்டுக்கு அளிக்கப்படும் ஆதரவு, வெறும் மைதானத்தில் வெற்றி பெறுவதற்கான உத்வேகத்தை மட்டுமல்லாமல், சமூகத்தில் சமத்துவம் மற்றும் முன்னேற்றத்தின் அடையாளமாகவும் விளங்கும் என தெரிவித்தார்.

இந்த இரண்டு ஆட்டங்களும், பினாங்கு பெண்கள் கால்பந்து அணிக்கு முக்கியமான சோதனைகள் ஆகும். வீராங்கனைகள் தங்கள் திறமையையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தும் இந்நேரத்தில், பார்வையாளர்களின் ஊக்கமும் ஆதரவும் அவர்களுக்கு பெரும் வலிமை சேர்க்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
-யாழினி வீரா



