
படம் : கூகுள்
லண்டன்: உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான லண்டனின் ஹீத்ரோ விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. விமான நிலையத்துக்கு அருகில் உள்ள துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 24 மணி நேரத்துக்கு விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாக தகவல்.
தீ விபத்தால் ஹீத்ரோ விமான நிலையத்துக்கான மின் சேவை தடைபட்டுள்ள காரணத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு என அனைத்து சேவைகளும் அங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. பயணிகள் அதற்கு தகுந்த படி தங்களது பயணத்தை திட்டமிட வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.
முதற்கட்டமாக 23 மணி நேரம் 59 நிமிடங்கள் வரை விமான நிலையம் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த சிரமத்துக்கு வருந்துவதாகவும் ஹீத்ரோ விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் விமான நிலையம் எப்போது மீண்டும் வழக்கம்போல செயல்பட தொடங்கும் என்பது குறித்த தெளிவு எதுவும் இல்லை என செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். இதன் காரணமாக சுமார் 120 விமானங்கள் வேறு இடங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தால் மேற்கு லண்டன் பகுதியில் வசித்து வரும் மக்களில் ஆயிரக்கணக்கானோர் மின் சேவையை பெற முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளனர். ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து தீ விபத்து ஏற்பட்ட துணை மின் நிலையம் 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சம்பவ இடத்துக்கு 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சென்றன. இதனால் ஐரோப்பா கண்டத்தின் பிரதான வான்வழி போக்குவரத்து பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
-ஶ்ரீஷா கங்காதரன்