
கோலாலம்பூர், 26 பிப்ரவரி — வெளிநாடுகளில் பணியாற்றிவரும் 10,000க்கும் மேற்பட்ட மலேசியர்கள் தாய்நாட்டிற்கு திரும்பி பணியாற்ற விண்ணப்பித்துள்ளதாக மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் வெளியிட்ட தகவலின்படி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள், வெளிநாடுகளில் பணியாற்றும் மலேசிய தொழில்முனைவோர் 11,402 பேர் TalentCorp மூலம் விண்ணப்பித்துள்ளனர். இதில் 7,241 விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டு, 4,730 பேர் நாட்டிற்கு திரும்பியுள்ளனர்.
கல்வித் துறையில் பணியாற்றுவோருக்காக 80 விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், 63 பேர் அங்கீகரிக்கப்பட்டு, 33 பேர் நாடு திரும்பியுள்ளனர். இது 52% திரும்பும் விகிதத்தைக் குறிக்கிறது.
“விடுபட்டவர்களில் ஆண்டு சராசரி 400 முதல் 500 பேர் மீண்டும் விண்ணப்பித்து வருகின்றனர்,” என்று டாம்பின் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ முஹமட் இஸாம் மோஹ்ட் இசாவின் எழுத்து கேள்விக்கு பதிலளிக்கையில் அமைச்சர் தெரிவித்தார்.
மலேசியர்களின் தாய்நாட்டிற்குத் திரும்புவதை ஊக்குவிக்க, Malaysia@Heart (MyHeart) திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 1,499 மலேசியர்கள் 59 மலேசிய நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
மேலும், நாடு திரும்பும் மலேசியர்களின் குழந்தைகளின் கல்வி தேவைகளை பூர்த்தி செய்ய 19 கல்வி நிறுவனங்கள் MyHeart திட்டத்துடன் இணைந்துள்ளதாக அவர் கூறினார்.
உலக வங்கி ஆய்வு (2021-2022) அறிக்கையின்படி, 281,429 மலேசியர்கள் வெளிநாடுகளில் பணியாற்றி வருகின்றனர். இதில் அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவில் 138,363 பேர், அமெரிக்காவில் 79,827 பேர், இங்கிலாந்தில் 37,549 பேர், மற்றும் கனடாவில் 25,690 பேர் வாழ்ந்துவருகிறார்கள் என்று அமைச்சர் தெரிவித்தார்.
-யாழினி வீரா